நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம். படித்த பட்டதாரிகள் பலரும் தங்களுடைய படிப்புக்கு சம்மந்தமே இல்லாத வேலைகளை தான் செய்து வருகின்றனர். கொரோனா என்ற நோய்த்தொற்று வந்தது முதல் நிறைய பேர் தங்களது வேலை மற்றும் சொகுசு வாழ்க்கையை இழந்து விட்டனர். இது தானே நீங்கள் எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் நாட்டின் மறுபக்கத்தை திரும்பி பார்த்தால் ஒரு சிலர் நீங்க நம்பமுடியாத அளவுக்கு கொரோனா காலத்திலும் வருமானம் ஈட்டியுள்ளனர்.
இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீங்க? சமூக ஏற்றத்தாழ்வு ஒரு காரணம். இன்னொரு காரணம் இருக்கிறது. அதுதான் புத்திசாலித்தனம். கஷ்டப்பட்டு உழைக்கிறவனை விட வேலையே செய்யாமல் இருக்குறவங்க எப்படி அதிக பணம் சம்பாதிக்கிறாங்க? எல்லாம் அவுங்க மூளையோட விளையாட்டு தான். மூளையை ஒழுங்கா பயன்படுத்தினா பொழைச்சிக்கலாம் என்பதற்கு விஜய் டிவி பிரபலங்கள் தான் உதாரணம்.
விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் பலரும் விரைவாக கார், பங்களா வாங்கி செட்டில் ஆகிவிடுகின்றனர் என்ற பேச்சு இருக்கிறது. இதற்கு சிவகார்த்திகேயன் தொடங்கி டிடி வரை பலரையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம். பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் கூட இப்போது கோடிகளில் புரளும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்களாக மாறிவருகின்றனர். இது அத்தனைக்கும் தொலைக்காட்சி மூலம் வரும் வருமானம் மட்டும்தான் காரணமா?
ஒரு விஷயத்தை எளிதில் எல்லோரும் மறந்து விடுகின்றனர். விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானம் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமானது. இதை சாத்தியப்படுத்த தேவைப்படும் முக்கியமான கருவி தான் யூடியூப் சேனல். தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் சொந்தமாக யூடியூப் சேனலையும் வைத்திருக்கின்றனர். அதில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் மொக்கையாக இருந்தாலும் அதை லட்சக்கணக்கானவர்கள் பார்வையிடுவதால் அதன் மூலம் அவர்களும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரியங்கா மற்றும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த மணிமேகலை ஆகியோர் வெளியிடும் வீடியோக்கள் சர்வ சாதாரணமாக லட்சக்கணக்கில் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களின் முகம் மக்களிடையே நன்கு தெரிந்த முகமாக இருக்கிறது. இன்னொரு காரணம் நான் ஏற்கனவே கூறியது போல வீடியோ மொக்கையாக இருந்தாலும் அதை அவர்கள் சொல்லும் விதம், காமெடி இதெல்லாம் அவர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தருகிறது.
ஒரு விஷயம் தெரியுமா? பிரியங்கா உள்ளிட்ட பிரபலங்களின் யூடியூப் சேனல் வருமானம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் யூடியூப் சேனல் வருமானத்தை விட அதிகமாம். இந்த ஐடியாவைத்தான் கோமாளி படத்திலும் காட்டியிருப்பாங்க. எனவே நீங்க வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பட்டதாரியாக இருந்தால் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி உங்க ஆட்டத்தை ஆடத் தொடங்குங்க. நீங்க தரமான வீடியோவை வெளியிட்டால் வருமானம் தானாக உங்களுக்கு வரும். தொலைக்காட்சி அல்லது சினிமா வாய்ப்புகள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.