ஸ்கூட்டி ஓட்டும் பெண்களின் ஆடையை விமர்சிக்கவே ஒரு குரூப் இருக்காங்க. அவங்களுக்கு மத்தவங்க கஷ்டம் பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது. சதாகாலமும் யாரையாவது ஒருவரை விமர்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரே இலக்காகும். தயவு செஞ்சு அவங்க சகவாசம் வெச்சுக்காதீங்க. ஒரு ஆண் நினைத்தால், பைக் ஸ்டார்ட் செய்த உடனே முறுக்கிக்கொண்டு 80-100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணிற்கு அது சாத்தியமில்லை. அவள் படுகிற கஷ்டத்தை முதலில் புரிந்துகொள்ளப் பாருங்க.
சேலை கட்டியிருந்தாலும் சரி, சுடிதார் போட்டிருந்தாலும் சரி ஆடைகளை சரி செய்த பிறகே ஒரு பெண்ணால் ஸ்கூட்டி ஓட்ட முடியும். கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலும், அது ஆபத்தாகிவிடும். அது வாகனம் ஓட்டும் அந்தப்பெண்ணோடு முடிந்துவிடுவதில்லை. இன்னொரு வண்டி அருகில் வரும்போது, ஒரு பெண்ணின் துப்பட்டா காற்றில் பறந்து முகத்தை மறைத்தால், அது சுற்றி இருப்பவர்களுக்கும் சேதத்தை உண்டாக்கிவிடும். பொண்ணுக எப்பவும் கிளம்ப லேட்டாவாங்க தான். அதற்கு பின்னால், இந்த மாதிரி ஏகப்பட்ட கரணங்கள் இருக்கு. அவற்றை புரிந்துகொண்டால், எந்த ஆணும் தேவையில்லாமல் எரிந்து விழ மாட்டான்.
சுடிதார் அணிந்து வாகனத்தை ஓட்டிச்செல்லும் பெண்கள் சிலர், துப்பட்டாவை பின்புறமாகவும், சிலர் முன்புறமாகவும் முடித்துபோடுகிறார்கள்.அது ஸ்டைலுக்காக இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்கானது. அதிலும் ஆடை விலகியதைப்பார்த்தால், "துப்பட்டா போடுங்க தோழி" குரூப்ஸ் ஓடி வந்துருவாங்க. அவங்க கண்ணுக்கு பெண்ணுடைய நெஞ்சு பகுதி தான் தெரியும் போலிருக்கு. அதனை தாண்டி அவள் எதிர்கொள்ளும் சிரமத்தைப்பார்த்தால், இப்படிப்பட்ட விமர்சனங்களே வந்திருக்காதே. ஆபத்து நிறைந்த வேலையைச் செய்யும் பெண்கள் அந்த வேலைக்குத் தக்க உடைகளை அணிவதுதான் பாதுகாப்பு. எவன் என்ன சொல்வான் என்றெல்லாம் யோசிக்கக்கூடாது.
சுழலும் இயந்திரங்கள் எங்கே இருந்தாலும் துப்பட்டாவை சுருட்டி உள்ளே வைத்துவிடுவதுதான் பாதுகாப்பு. அப்படி மறைத்துக் கொள்வதை அவர்களே விரும்பினால் சுடிதாருக்கு மேல் காட்டன் ஜாக்கெட் மாதிரியான ஆடை அணியலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் மாராப்புடன் கூடிய பாரம்பரிய உடைகள் எதுவும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களுக்கு ஏற்றவை அல்ல. இதைச்சொன்னால் சமுதாய காவலர்கள் சண்டைக்கு வருவாங்க. அப்படி வரும் ஆட்களை, ஒரு நாள் பெண் வேடம் போட்டுவிட்டு, பெண்கள் மாதிரியே இயல்பாக வேலை செய்யச்சொல்லி பெண்டு எடுக்கணும். அப்போ புரியும் கஷ்டம்.