என்ன ராசாத்தியக்கா! போன வாரம் தான் மகளுக்கு கல்யாணம் ஆச்சு. எப்படி இருக்கா மகள்? புகுந்த வீட்டுல நல்லா பாத்துக்கராங்களா? அப்படின்னு கேட்டது தான், உடனே ராசாத்தியக்காவுக்கு ஒரே அழுகையா போயிடுச்சி. அட இப்ப நான் என்ன கேட்டுட்டேன்? இப்படி அழுகுறீங்க? அப்படின்னு கேட்ட பிறகு தான் சொல்ல ஆரம்பிச்சாங்க.
கல்யாணம் முடிஞ்ச உடனே மாப்பிள்ளை மற்றும் பொண்ணோட இங்க வந்தாங்க. எண்ணெய் தேச்சி குளிப்பாட்டி கறியும் சோறும் போட்டா மாப்பிள்ளை கோவமா இலையை விட்டு எழுந்திரிச்சாரு, என்ன புனிதா உங்க அம்மாகிட்ட ஏதும் சொல்லலையான்னு புள்ளைய பாத்து கோவமா கேட்டாரு. அப்புறம் தான் புள்ள, "எங்க வீட்டுக்காரர் அசைவம் சாப்பிட மாட்டாரு" அப்படின்னு ஒரு குண்ட தூக்கி போட்டா.
இது என்னடி வம்பா போச்சு! கல்யாணத்துக்கு முன்னாடியே இத சொல்லலையா அப்படின்னு கேட்டா, இதெயெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்கன்னு புனிதா சண்டைக்கு வர்றா. மன்னிச்சிடுங்க மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு அவசரமா சட்டினி அரைச்சி தோசை சுட்டு போட்டுட்டு, புனிதாவுக்கு கறி சாப்பாடு போடப்போனா, அவளும் நேத்துல இருந்து கறி சாப்பிடறது இல்லைன்னு இன்னொரு குண்ட தூக்கி போடறா. நான் என்னத்த சொல்றதுன்னு ராசாத்தி அக்கா அழுதுகிட்டே சொல்லிக்கொண்டிருக்கும்போதே மணி அண்ணன் (ராசாத்தி அக்காவின் கணவர்) அங்கு வந்தாரு.
என்னங்க அண்ணா, அக்கா இப்படியெல்லாம் சொல்றாங்க. நீங்க மாப்பிள்ளை வீட்டுல இதுபத்தி பேசலையா? என்று கேட்க, அட நீ வேற ஏன் வெந்த பு ண்ணுல வேலை பாய்ச்சற தம்பி. மாப்பிள்ளை வீட்டுல புனிதாவோட இஷ்டம்ன்னு சொல்லறாங்க. அவங்கள குறை சொல்லக்கூடாது. ஆனால் புருஷனுக்காக இவ இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா. ரொம்ப கட்டாயப்படுத்தினா அது தான் கட்டிக்கொடுத்துட்டீங்கள்ள, வந்தா வந்த வேலைய பாத்துகிட்டு போங்கன்னு பேசறா. இனி என்ன பண்றதுன்னு வரவேண்டியதா போயிடுச்சி.
ஒரு பக்கம் பொண்ண நினைக்கிறப்ப சந்தோசமா தான் இருக்கு. இப்பவே புருஷன தலையில தூக்கி வெச்சிகிட்டு ஆட்டம் போடறா. என்னோட பொண்ணா இதுன்னு நம்பவே முடியல. நம்ம வீட்டுல இருந்தப்ப வாரம் ரெண்டு தடவை கறி இல்லையின்னா ராசாத்திக்கும் அவளுக்கும் சண்டையே நடக்கும். ஆனா இப்ப அப்படியே தலைகீழா மாறிட்டா. என்ன தான் இருந்தாலும் வாழ்க்கைக்கு எது தேவையோ அதுக்கு தகுந்தமாதிரி மாறிக்கிட்டா. அதனால தான மாமனார், மாமியார் அப்புறம் மாப்பிள்ளையோட சந்தோசமா வாழமுடியுது என்று சொல்லி முடித்தார். உண்மையில மணியண்ணன் சொன்னது சரின்னு தான் தோணுச்சி. வாழப்போன இடத்தில இருக்கும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அவளை மாத்திக்கிட்டு அவளையும் அவளோட குடும்பத்தையும் சந்தோசமாக வைத்திருக்கிறாள் புனிதா. உண்மையிலேயே புனிதாவை நினைச்சா பெருமையாக இருக்கிறது.
கணவருக்காக எத்தனையோ விஷயங்களை மனைவி மாத்திகிட்டதாக பல வீடுகளிலும் கதை கதையா கூறுவாங்க. ஆனால், இப்படி ஒரு கதையை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சாப்பாட்டு விஷயத்தில் ஒரு பெண் கணவனுக்காக விட்டுக்கொடுக்கிறான்னா அவுங்க ரெண்டு பேருக்குள்ள எவ்வளவு அன்யோன்யம் இருக்கும். எல்லாப்பெண்களும் கணவருக்காக தியாகம் செய்ய ஆரம்பித்துவிட்டால் அந்தப்பெண்களின் கணவன்மார்களைப்போல அதிர்ஷ்டசாலிகள் வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.