எனக்கு யாராவது தலையை சொறிஞ்சுவிட்டாலே தூக்கம் கண்ணை சொருகும். நாய் குட்டிக்கு தடவி கொடுப்பது மாதிரி தடவிக்கொண்டே இருந்தால், சொர்க்கம் போல இருக்கும். ஏன்னு தெரியவில்லை, எனக்கு தலையில் கை வைத்தால் மட்டும், காட்டுத்தூக்கம் வருது. எனக்கு மட்டும் தான் இந்த பழக்கம் இருக்குன்னு பார்த்தா, என் நண்பனுக்கு சலூன் கடையில் முடி வெட்டும் போது கூட தூக்கம் வந்துவிடுகிறது. முடி வெட்டும் போது ஒரு பிரச்சனையும் இல்லை. பயபுள்ள ஷேவிங் பண்ணும் போது தூங்கி விழுந்தால், கன்னத்தில் கோடு போட்டுக்கொண்டு தான் வெளிய வரணும்.
நமக்கு தூக்கம் வர காரணமே இந்த மெலடோனின் ஹார்மோன் பண்ணும் வேலை தான். இரவு நேரம் உடலில் மெலடோனின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. அப்போ தூக்க உணர்வு வர ஆரம்பிக்கிறது. காலை நேரம் விடிந்த பிறகு, மெலடோனின் அளவு குறைவதால் தூக்கம் தெளிந்துவிடுகிறது. பகல் நேரத்திலும் உடலில் மெலடோனின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கெல்லாம் உணர்வு கூட இல்லை, ஸ்ட்ரெயிட்டா தூக்கமே வந்துருது.
சிலருக்கு பகலில் தூக்கம் வர, உடல் உழைப்பு, உணவு, இரவு அதிகநேர கண்விழித்தலும், வயது மூப்பும், வேறு சில காரணங்களும் இருக்கலாம். சிறு வயதில் அம்மா தலையைக் கோதிவிடும் போது வரும் தூக்கத்தை எல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அது போலவே, சலூன் கடையில் முடி வெட்டும் போதும், தலையை கோதி விட்டு, குளிர்ந்த நீர் ஸ்ப்ரே செய்யப்படுவதால் ஒருவித சிலர்ப்பு உணர்வு ஏற்படுகிறது. அதன் கூடவே, ஒரே சிந்தனையை நோக்கி மனது செல்ல ஆரம்பிக்கிறது.
முடி வெட்டும் போது கண்ணாடியை பார்த்துக்கொண்டே இருப்பதும், கத்தரிக்கோலின் கஜக்! கஜக்! சத்தத்தை கேட்டுக்கொண்டே இருப்பதும் நம்முடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்த ஆரம்பிக்கிறது. இடையில் தலையை வாரி விடுவதும் சேர்ந்து, குளிர்ச்சியும் இருப்பதால், தூக்கம் நம்மை அறியாமல் வந்துவிடுகிறது. எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும், முடி வெட்டும் போது ஒரு கொட்டாவியாச்சும் வந்து விடும். இனியும் முடி வெட்டும் போது சலூனில் யாராச்சும் தூங்கிவிழுந்தால் தப்பா பார்க்காதீங்க. அப்பாவி புழு பூச்சிக அவங்க.