ஆணும், பெண்ணும் ஒரு சேர பணியாற்றும் இடங்களில், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதற்காக ஒவ்வொன்றிற்கும், எதிவினையாற்றிக்கொண்டிருந்தால், அதுவே பெண்ணின் பலவீனமாகிவிடும். ஒருத்தன் வேண்டுமென்றே பார்க்கிறானா? இல்லை தற்செயலாக பார்க்கிறானா? என்பதை பெண் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவாள். ஒரு சிலர் நேரம் பார்த்து காலை வாரி விடுவார்கள், அப்போ கையும் களவுமாக பிடித்துவிடலாம்.
ஆனால் சின்ன சந்தேகத்துக்காக பெரிய லெவலில் பிரச்சனை செய்ய வேண்டாம். இந்த மாதிரி பிரச்சனைகள் எழுபது வயது பெண்களுக்கு கூட இருக்கும். மற்றபடி பெண்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ள தேவையில்லை, தொடர்ச்சியாக ஒருவனின் பார்வை, உங்கள் மீது தவறாக படுகிறது என்றால் மட்டும், அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருந்து விலகி இருங்கள். ரொம்ப சீரியஸா எடுக்காதீங்க. உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்துங்கள். "உத்தியோகம் புருஷலட்சணம்" என்கிற மாதிரி, உங்களுக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தது அந்த வேலை.
இது போன்ற பிரச்சனைகள் பேருந்து , தெருக்கள், பயணங்கள் மற்றும் அலுவலகங்கள் என்று எல்லாவற்றிலும் சர்வசாதாரணமாக நடக்கும். அதையெல்லாம் பார்த்தால், வீட்டை தாண்டி தெருவில் நடமாடக்கூட முடியாது. உங்கள் கண் எதிரில் ஒரு கண் உங்களை பார்க்கிறது என்றால், சுற்றி 360 டிகிரியிலும் எத்தனையோ கண்கள் உங்களுக்கே தெரியாமல், கவனித்துக்கொண்டிருக்கலாம். அந்த பதர்களுக்காக நீங்கள் பதற வேண்டியது இல்லை.
குனியும் போதோ, நிமிரும் போதோ ஆணின் பார்வை தற்செயலாக உங்கள் மீது படுவது இயல்பு. கூர்மையான கத்தி போல இருக்கும் ஆண்கள், உடனே மனதை வேறு பக்கம் திருப்பி அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கொஞ்சம் மழுங்கி போன ஆண்கள், சபல எண்ணத்தில் இருந்து வெளி வராமல், தொடர்ச்சியாக விலகிய ஆடைகளை நோக்கியே அவர்களது பார்வை இருக்கும். அந்த மாதிரியான ஜென்மங்களை திருத்த முடியாது. முறைத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, கம்பீரமாக நடந்து சொல்லுங்கள். காலில் ஒட்டிய தூசிக்காக, கவலைப்படுவது எல்லாம் நமக்கு அழகல்ல.