திமிங்கலத்தின் மேல் அமர்ந்து சவாரி செய்யும் அளவுக்கு தைரியம் மிக்க மனிதர்களை காண்பது அபூர்வம். ஆனால் இங்கு நாம் பேசப்போவது உயிருள்ள திமிங்கல சவாரியைப்பற்றி கிடையாது. உயிரோட இருக்குற திமிங்கலத்துக்கிட்ட யாராவது நெருங்க முடியுமா? அதனால்தான் இறந்த திமிங்கலத்தை வைத்து ஒரு அற்புதமான விஷயத்தை செஞ்சிருக்காங்க ஆஸ்திரேலியர்கள்.
ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு வினோதமான சிகிச்சை முறை 19ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமிங்கல சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. இந்த சிகிச்சை எப்படி இருக்கும் என்றால் நோய் பாதிக்கப்பட்ட நபரை இறந்த திமிங்கலத்தின் உடலுக்குள் உட்கார வைத்து விடுவர்.
இறந்து போன திமிங்கலம் என்பதால் அதனுள் தைரியமாக நோயாளிகளை அனுப்பிவைத்துவிட்டு சுமார் 30 மணி நேரம் அப்படியே விட்டுருவாங்க. வாத நோயால் பாதிக்கப்பட்ட நபர் 30 மணி நேரம் வரை திமிங்கலத்தின் உடலுக்குள் இருந்துவிட்டு வெளியே வந்தால் அவர்களுடைய நோய் குணமாகி விடும் என்று ஆஸ்திரேலிய மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அழுகும் திமிங்கலத்தால் உற்பத்தி செய்யப்படும் வெப்பம் மற்றும் வாயுக்கள் இணைந்து 'வியர்வை பெட்டி' சூழலை உருவாக்கி, வாதக் கோளாறுகளின் வலியைப் போக்கும் என்று நம்பப்பட்டது. நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விரைவாக பரவுவதற்கு முன்பு, 1894 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய செய்தித்தாள்களில் இந்த சிகிச்சையின் அறிக்கைகள் முதலில் வெளியானது.
இறந்த திமிங்கலத்தின் உடலில் துளைகள் போடப்பட்டு வாத நோயால் பாதிக்கப்பட்டவர் உள்ளே அனுப்பப்படுவார். சுவாசக்கோளாறு ஏற்படாமல் இருக்க நோயாளியின் தலைப்பகுதி வெளியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மார்பு அல்லது இடுப்பு பகுதியில் இருந்து கால்கள் வரையிலான உடல் முழுவதும் திமிங்கலத்தின் குடலுக்குள் இருக்கும். இந்த சிகிச்சை பெற்ற நபருக்கு ஒரு வருடத்திற்கு வாத நோயால் ஏற்படும் மூட்டு வலி வராமல் இருக்கும் என்று கூறப்பட்டது. இப்படி ஒரு சிகிச்சையை ஆஸ்திரேலியர்கள் செஞ்சிருக்காங்க என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?