திருமணத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் சாப்பாடு தான். உணவு பரிமாறுவது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விருந்து பரிமாறுவதற்கு சப்ளையர்களை வைத்துக்கொள்வது நல்லதா அல்லது உறவினர்களை வைத்து பரிமாறுவது நல்லதா என்ற கேள்வி பலருடைய மனதிலும் இருக்கும். அதற்கு ஒரு பதில் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று இந்த பதிவை எழுதுகிறேன்.
வசீகரா படத்தில் உறவினர்களை வைத்து கல்யாணத்தை எப்படி நடத்துவது என்று விஜய் சில வசனங்களை பேசியிருப்பார். அந்த மாதிரி நிஜத்தில் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் நமக்கு முந்தைய தலைமுறையில் நடந்த கல்யாணம் மாதிரி இப்போது எந்த கல்யாணமும் நடப்பதில்லை. நம்முடைய பெற்றோர் கல்யாணத்தில் பெரும்பாலும் உறவினர்கள் எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்திருப்பாங்க. விருந்து பரிமாறுவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றியிருப்பாங்க.
இப்போதும் சில ஏழை வீட்டுக்கல்யாணங்களில் உறவினர்களை வைத்தே உணவு பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் எல்லா நேரத்திலும் உறவினர்களை வைத்து பரிமாற முடியாது. சப்ளையர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்பது தேவையில்லாத செலவாக இருக்குமோ என்று நீங்க நினைக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் அவர்கள் அதை சமாளித்து உணவு பரிமாறிவிடுவர். வீட்டில் 100 பேருக்கு விருந்து கொடுப்பதற்கு வேண்டுமானால் உறவினர்களை வைத்து பரிமாறிக்கொள்ளலாமே தவிர பெரிய மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வரும் இடத்தில் சில உறவினர்களை வைத்து விருந்து பரிமாறுவது இயலாத காரியம்.
உறவினர்களை வைத்து பரிமாறுவதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பெண் வீட்டு உறவினராக இருந்தால் அவனுக்கு வேண்டிய சொந்தக்காரனுக்கு கேட்டுக்கேட்டு பரிமாறுவான். மாப்பிள்ளை வீட்டு உறவினராக இருப்பவன் மாப்பிளைக்கு வேண்டப்பட்ட சொந்தங்களை மட்டும் விழுந்து விழுந்து கவனிப்பான். அதே இடத்தில் சப்ளையர்களை வைத்து பரிமாறினால் அவர்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரி பரிமாறுவர். இதிலிருந்து சப்ளையர்களை வைத்து விருந்து பரிமாறுவதே சிறந்தது என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அதற்காக உறவினர்களை வைத்து பரிமாறக்கூடாது என்று அர்த்தமில்லை. ஏற்கனவே கூறியது போல வீட்டில் நடக்கும் சிறிய விருந்து நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை வைத்துக்கொள்ளலாம்.