கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக முடங்கிப்போயிருந்த பல்வேறு படங்கள் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே வெளியாகிக்கொண்டு இருக்கிறது. கமலஹாசன், விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இந்த வருடத்தில் தான் வரிசையாக வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சில நடிகர்ளின் படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளதால் கையில் காசு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கேப் விட்டால் கூட பரவாயில்லை. இவுங்க என்னடான்னா 2 வாரம் அல்லது ஒரு மாத இடைவெளியில் பல படங்களை வெளியிட ஆயத்தமாகி வருகின்றனர். நம்ம பர்ஸை பதம் பார்க்க தயாராகி வரும் படங்களை பற்றி இன்றைய பதிவில் காணலாம்வாங்க.
1. ஜெயம் ரவி
பூமி திரைப்படத்தின் படுதோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் நான்கைந்து படங்கள் உருவாகி வருகிறது. அதில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அவர் நடித்து முடித்துள்ள அகிலன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் 15 நாட்கள் இடைவெளியில் வெளியாகவுள்ளது.
2. விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹான் படம் வெளியானது. தற்போது அவருடைய கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஒரு மாத இடைவெளியில் வெளியாகவுள்ளதால் அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.
3. கார்த்தி
சுல்தான் படத்துக்கு பிறகு கார்த்தி தான் கமிட்டான படங்களை விறுவிறுப்பாக முடித்துக்கொடுத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 3 படங்கள் வெளியாகவுள்ளன. விருமன் படம் ஆகஸ்ட் மாதமும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதமும் சர்தார் படம் தீபாவளி வெளியீடாகவும் வரவுள்ளன. அடுத்த 3 மாதங்களில் கார்த்தியின் மூன்று படங்கள் திரைக்கு வருவதால் எதை பார்ப்பது, எதை விடுவது என நமக்கே சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது.
4. தனுஷ்
ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்திருந்தாலும் தனுஷுக்கு இருக்கும் மவுசு மட்டும் குறைந்தபாடில்லை. அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நானே வருவேன் படம் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக செப்டம்பர் 30ம் தேதியும், வாத்தி திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனுஷ் ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.
5. ரன்பீர் கபூர்
இவரு எப்படி இந்த லிஸ்டில் வந்தார் என்று யோசிக்கிறீங்களா? அதற்கு காரணம் அவருடைய படங்களும் தற்போது அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக எந்தப்படமும் வெளியாகவில்லை. கொரோனாவுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட பிரம்மாஸ்திரம் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான ஷம்ஷேரா இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த வருடம் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள 2 திரைப்படங்களும் பான் இந்தியா படங்களாக வெளியாகவுள்ளது. மேலும் பிரம்மாஸ்திரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அவரின் மனைவி ஆலியா பட் நடித்திருப்பது அந்தப்படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் உங்களுக்கு பிடித்த நடிகர்களின் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளதால் நீங்க உங்க பர்ஸை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியமுங்க.