நம் முன்னோர் சொல்லி வைத்துள்ள பழமொழிகளில் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையில் அனுபவிக்கும் போது தான் நமக்கே முழுவதுமாக புரிகிறது. ஒரு வீட்டில் 10, 100 அல்லது ஆயிரம் ஆம்பளைங்க கூட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்கு மருமகளாக ஒரு பெண் வந்துவிட்டால் அவளுக்கும் மாமியாருக்கும் நடக்கும் சண்டை அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது. இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று கூறுவதை வெறும் மாமியார், மருமகள் சண்டையை வைத்து மட்டும் தீர்மானிக்கவில்லை. அதில் இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரம் அடங்கியிருக்கிறது.

மாமியார், மருமகள் மட்டுமல்லாமல் அம்மா, மகள் கூட அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது வழக்கம் தான். பெண் பிள்ளைகள் இருக்கிற வீட்டில் உள்ள ஆண்களுக்கு இந்த விசயம் நன்றாக தெரிந்திருக்கும். குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை கணவன் அல்லது மாமியாரிடம் சண்டை போடும் மருமகள் தனக்கு குழந்தை பிறந்த பிறகு பல மாற்றங்களை சந்திக்கிறாள். அந்த குழந்தை ஆண் என்றால் பிரச்சனையில்லை. அதுவே பெண் குழந்தையாக இருந்தால் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய பிறகு அம்மா, மகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.

தன்னுடைய மகளும் இன்னொரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போக வேண்டியவள் தான் என்பதை உணர்ந்து அவளது தாய் நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று பல புத்திமதிகளை சொல்லுவாள். ஆனால் இளம் வயதில் இருக்கும் மகள், தாய் சொல்லும் எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். உதாரணத்துக்கு வீட்டில் சமைப்பது, கோலம் போடுவது போன்ற வேலைகளில் கிராமத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் பலரும் தங்கள் அம்மாவுக்கு உதவி செய்வாங்க. ஆனால் நகர்ப்புறத்தில் இருக்கும் பெண் குழந்தைகள் பிறந்த வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வளர்ந்திருப்பாங்க.

கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு போனால் நீ தான் அங்கு எல்லா வேலையும் செய்யணும். இப்போதிருந்தே அதுக்கெல்லாம் பழகிக்கோ என்று அம்மா எவ்வளவு சொன்னாலும் மகள் அதை காதில் வாங்காமல் தான் இருப்பாள். திருமணமாகி சென்றபிறகு தான் அம்மா சொன்னது எல்லாம் நினைவுக்கு வரும். பிறந்த வீட்டில் அம்மா சொல்பேச்சை கேட்காமல் இருப்பதால் அம்மா மகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அதன் பிறகு மகள் மருமகளாக மாறிய பிறகு மாமியாருடன் சண்டை நடக்கிறது. மருமகள் ஒரு கட்டத்தில் தாயாக மாறிய பிறகு அவள் தன்னுடைய அம்மா தனக்கு சொன்ன புத்திமதிகளை தன் மகளுக்கு சொல்லுவாள். ஆனால் அந்த மகள் இவள் பேச்சை கேட்காத போது மீண்டும் இவர்களுக்கு இடையே சண்டை ஆரம்பிக்கிறது. தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர முடிந்தபாடில்லை. ஆண்களும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வார்கள். இருப்பினும் அவர்கள் எளிதாக சமாதானம் ஆகிவிடுகின்றனர். ஆனால் இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டால் அவர்கள் எளிதில் சமாதானம் ஆவதில்லை. இது தான் ஆண்கள் சண்டைக்கும் பெண்கள் சண்டைக்கும் இருக்கும் வித்தியாசமே.

ஏதோ நம்ம வீட்டு பெண்களை பற்றி தவறாக கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அனுபவப்பூர்மா உணர்ந்து தான் சொல்கிறேன். அதுக்காக வீட்டுல பெண்களே இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. பெண்கள் இருந்தால் தான் வீடு கலகலப்பாக இருக்கும். பெண்களிடையே நடக்கும் சண்டை அவ்வளவு எளிதில் முடியாது. அவுங்களாகவே அதை மறந்து நார்மல் ஆக வேண்டும். அதுவரை ஆண்கள் அனைவரும் அமைதியாயகத்தான் இருந்தாக வேண்டும். என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வைத்து நான் சில கருத்துக்களை கூறியிருக்கிறேன். இதுபோல உங்களது வாழ்க்கையிலும் சில அனுபவங்கள் இருக்கும். அதைப்பற்றி நீங்களும் எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.