நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி இயக்குனர் ஹெச்.வினோத் இந்த துணிவு படத்தை இயக்கி இருந்தார். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துணிவு படத்தை போல ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

24 ஜனவரி காலை பத்து மணி அளவில் இந்த வங்கியில் உள்ள ஊழியர்கள் வங்கியை திறந்து வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர். அப்போது இன்ஜினியரிங் படித்த கலீல் ரகுமான் என்னும் 23 வயது இளைஞர் வங்கிக்குள் வந்து வங்கி சம்மந்தமான சில சந்தேகங்கள் கேட்பதை போல கேட்டுள்ளார். அப்போது தான் மறைத்திருந்து வைத்த ஸ்பிரேவை எடுத்து மூன்று ஊழியர்கள் மீது அடித்துள்ளார்.

மூன்று வங்கி ஊழியர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். நிலைமையை உணர்ந்த உள்ளே இருந்த மற்றொரு ஊழியர் வங்கிக்கு வெளியே சென்று திருடன் திருடன் காப்பாத்துங்க என்று சத்தம்போட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரும் வங்கிக்குள் புகுந்து திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

எதற்கு இப்படி செய்தாய் என அந்த இளைஞரிடம் கேட்டதற்கு நான் இன்ஜினியரிங் முடித்துள்ளேன்,வேலை இல்லை, செலவுக்கு காசு இல்ல, வீட்டுலையும் காசு தர மாட்டேங்குறாங்க, அதனால தான் துணிவு மற்றும் சில வங்கி கொள்ளை படங்களை பார்த்துட்டு திருட வந்தேன் என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார் கலீல் ரகுமான். தற்போது போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
