தாய்மை என்பது பெண்களுக்கு கடவுளால் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய கெளரவம். ஒரு பெண் தனது வாழ்நாளில் முழுமையடையும் இடம் இந்த தாய்மை தான். ஒரு குழந்தையை 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கும் தருணத்தில் பெண்ணானவள் உலகின் அதீத சக்தியாக பார்க்கப்படுகிறாள். அதனால் தான் தாய்க்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அதே போல பல தருணங்களில் 10 மாதம் ஒரு குழந்தையை சுமந்து பெற்று பாருங்கள் அதன் வலியும், வேதனையும் அப்போது புரியும் என்று ஆண்களை கிண்டலடிக்கும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள். உண்மையில் ஆண்கள் கருவுறுதல் என்பது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தால், அது முடியும் என்று சிலர் நிரூபித்து காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் நகரை சேர்ந்த தாமஸ் பீட்டி என்பவர் 3 குழந்தைகளை (1 பெண், 2 ஆண்) பெற்றெடுத்த ஆணாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேட்க மிகவும் வியப்பாக உள்ளதா? ஆமாம், அவ்வளவு வித்தியாசமானது தாமஸ் பீட்டியின் வரலாறு. 1974-ல் பிறந்த தாமஸ் பீட்டி, இயற்கையில் ஒரு பெண். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ட்ரேசி லாகோண்டினோ. தனது 10-வது வயதில் இருந்தே ஒரு ஆண் போன்ற குணாதிசியங்களுடன் வளர துவங்கியுள்ளார். தனது 24 வது வயதில் அதற்குண்டான முயற்சியும் எடுத்து அறுவைசிகிச்சை மூலமாக ஆணாகவே மாறியுள்ளார். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தனது குடியுரிமை ஆவணங்கள், பாஸ்போர்ட் போன்ற முக்கிய கோப்புகளில் அரசின் அனுமதியோடு தான் ஒரு ஆண் என்பதை தாமஸ் பிட்டி பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 2006-ம் ஆண்டில் தாமஸ் பீட்டி மூளையில் உருவான ஒரு வித்தியாசமான யோசனை தான் இந்த நிகழ்வுக்கு அடித்தளமிட்டது.
நாம் ஏன் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க கூடாது? என்ற சிந்தனை தாமஸ் பிட்டிக்கு வரவே, அவரும் மருத்துவரிடம் கலந்தாலோசித்துள்ளார். மருத்துவர் வாய்ப்புகள் உள்ளதாக கூறவே, அவர் மாதம் இரண்டு முறை எடுக்கும் ஹார்மோன் ஊசியை நிறுத்தியுள்ளார். பின்னர் தனது உடலை செயற்கை கருவுறுதலுக்கு ஏற்றவாறு தயார்படுத்தியுள்ளார். அதன் விளைவாக 2007-ம் ஆண்டில் செயற்கை முறையில் கருவுற்றும் இருக்கிறார்.
2008-ம் ஆண்டில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் சுக பிரசவமாக பிறந்தது என்பது மேலும் ஆச்சர்யமானது. அந்த குழந்தை தான் ஒரு ஆண் மகனால் பெற்றெடுக்கப்பட்ட முதல் பெண் குழந்தை என்ற சாதனையை படைத்தது. அப்போது அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்று வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். பின்னர் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார் தாமஸ் பீட்டி. தற்போது 47-வயதாகும் இவர் 4-குழந்தைகளுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.