சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் சோலோதர்ன் என்ற நகரம் தான் மிகவும் விசித்திரமான நகராக அறியப்படுகிறது. பொதுவாக அனைத்து நகரங்களின் கட்டமைப்பும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்தது. ஆனால் இந்த நகரத்தில் அனைத்துமே 11 என்ற எண்ணின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் இருக்கும் மொத்த தேவாலயங்களின் எண்ணிக்கை 11. இது தவிர இங்கிருக்கும் நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயர்ந்த கோபுரங்களின் எண்ணிக்கையும் கூட 11 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இங்கு அமையப்பட்டுள்ள பிரதானமான தேவாலயமான புனித உர்சஸின் தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. 11-ன் அதிரவைக்கும் பின்னணி இங்கிருந்து தான் தொடங்குகிறது. அதாவது இந்த தேவாலயம் சரியாக 11 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் 3 பெரிய படிக்கட்டுகளின் தொகுப்பில் ஒவ்வொன்றிலும் 11 வரிசைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாம். அதைவிட ஆச்சர்யமான ஒன்று, இந்த தேவாலயத்தில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கை 11, மற்றும் தேவாலய மணிகளின் எண்ணிக்கையும் 11 ஆக உள்ளது. இது மேலும் வியப்பை அதிகரிக்க செய்கிறது.
உலகத்தில் விலை மதிக்க முடியாத மிக முக்கியமான விஷயம் நேரம் தான். புவியின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு நமது நேரம் வரையறுக்கப்படுகிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் 12 மணி நேரம் பகலாகவும், 12 மணி நேரம் இரவாகவும் இருக்கும் என்ற கூற்று வரையறுக்கப்பட்டு, அதனை நாம் நேரடியாக காணும் வகையில் கடிகாரம் என்ற சாதனம் உருவாக்கப்பட்டது. உலக வரலாற்றில் பல்வேறு விதமான கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதன் வடிவம் மற்றும் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் மட்டும் இடத்துக்கு இடம் வேறுபடும். ஆனால் அனைத்து கடிகாரங்களும் 12 மணி நேர முறையினை பின்பற்றுமாறு தான் இருக்கும். உலக வரலாற்றில் ஒரு கடிகாரம் மட்டும் தான் 11 மணி நேரத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஆமாம் இந்த கடிகாரத்தில் இருக்கும் எண்கள் 12 என்ற இலக்கத்தை கொண்டிருக்கவில்லை. இது மர்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது மற்றும் இந்த நகரத்தில் இருக்கும் பெரும்பாலான கடிகாரங்களில் 12 என்ற இலக்கம் இருந்தாலும் அந்த நேரத்தில் அதில் மணி ஒலிப்பதும் இல்லையாம். இந்த நகரத்தில் இருக்கும் கடிகாரங்களும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதையெல்லாம் விட சிறப்பு என்னவென்றால் இங்கு ஒருவருடைய 11-வது பிறந்தநாளைத்தான் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்த நகரில் 11 என்ற எண் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அதன் பின்னணி குறித்த விஷயங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.