பெரும்பாலான மக்களுக்கு வீடுகளில் செய்யும் சிறு தவறுகள் கூட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியாது. சாதாரண குண்டூசி கூட உங்கள் வாழ்க்கையில் நல்லது கெட்டது ஏற்பட காரணமாக இருக்கும் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த சங்கதி எல்லாம் நம் முன்னோர்கள் கூறியுள்ள மனையடி சாஸ்திரத்தில் உள்ளது. மனையடி சாஸ்திரம் உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப்போடலாம் என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால் அதை நினைத்து நாம் பயந்துபோக வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில தவறுகளை சரி செய்துகொண்டாலே போதுமானது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளை செய்துகொண்டிருக்கிறோம். அதை எப்படி சரி செய்வது என பார்ப்போம் வாங்க.

படுக்கையில் உணவு உண்பது நமக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களில் முதன்மையானது என சொல்லலாம். இது ஒரு மோசமான நடைமுறையாக கருதப்படுகிறது. படுக்கையில் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் வாழ்க்கையில் செழிக்க முடியாது என்று நம்பப்படுகிறது. இந்த பழக்கம் நம்மை கடன்காரனாக மாற்றி பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இரவு சாப்பிட்டு முடித்த பிறகு சமையலறையில் உள்ள பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு படுப்பது தான் நல்லது. காலையில் எழுந்து பாத்திரம் கழுவுவது தான் பலருடைய வீட்டிலும் இருக்கும் நடைமுறை. ஆனால் இதை நீங்க கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வீட்டில் குடியிருக்கும் மகாலட்சுமி கோபித்துக்கொண்டு வெளியேறுவாள் என்பது ஐதீகம். இதை நம்புவது உங்கள் இஷ்டம். நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்க.

மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பணம், பால், தயிர், உப்பு யாரேனும் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. இது உங்கள் நிதி நிலையை சீர்குலைய செய்துவிடும். இரவில் குளியலறையில் இருக்கும் வாளியில் தண்ணீர் நிரப்பி வையுங்க. இப்படி செய்வதால் வீட்டிலுள்ள தீய சக்திகளின் தாக்கம் படிப்படியாக குறையும். மேலும், சமையலறை வாளியில் தண்ணீர் நிரப்பி வைப்பதால் நம் மனக்கஷ்டங்கள் குறைவதோடு லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேற்கூறியவற்றை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.