ஜிபாகிரேவின் உப்பு கதீட்ரல் என்பது ஒரு நிலத்தடி ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது கொலம்பியாவின் குண்டினமார்காவில் உள்ள ஜிபாகிரே நகருக்கு அருகிலுள்ள ஒரு ஹலைட் மலையில் 200 மீட்டர் (660 அடி) நிலத்தடி சுரங்கங்களுக்குள் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் யாத்திரை செய்யும் இடமாகவும் திகழ்கிறது.
கீழே உள்ள கோவிலில் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பைக் குறிக்கும் மூன்று பிரிவுகள் உள்ளன. சின்னங்கள், ஆபரணங்கள் மற்றும் கட்டடக்கலை விவரங்கள் ஹலைட் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் சில பளிங்கு சிற்பங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் உப்பால் ஆனது. கொலம்பியாவின் மிகவும் புகழ்பெற்ற இந்த தேவாலயத்திற்கு செல்லும் சுரங்கப்பாதை பூமியின் குடலுக்குள் நுழைவதைப் போல நம்மை உணர வைக்கிறது.
இந்த கதீட்ரல் கொலம்பிய கட்டிடக்கலையின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது "நவீன கட்டிடக்கலை நகை" என்று விவரிக்கப்படுகிறது. இந்த கதீட்ரல் கொலம்பிய மக்களுக்கு ஒரு மதிப்புமிக்க கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் மத பாரம்பரியத்தை வழங்குகிறது.
இந்த கதீட்ரல் ஒரு செயல்படும் தேவாலயமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு 3,000 பார்வையாளர்கள் வரை வருகை புரிகின்றனர். ஆனால் இந்த தேவாலயத்தில் பிஷப் என்று யாரும் கிடையாது. எனவே கத்தோலிக்க மதத்தில் இது ஒரு கதீட்ரல் என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்தை பெறவில்லை.
சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உப்பு கட்டமைப்பு உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கி.மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கொலம்பியனுக்கு முந்தைய மியூஸ்கா கலாச்சாரத்தால் இந்த ஹலைட் சுரங்கங்கள் சு ரண்டப்பட்டன. இது அவர்களின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாகும்.