அசாம் மாநிலம் குவஹாட்டியில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. உள்ளே 147 பேர் இருந்தாங்க. அந்த விமானத்தில் 61 வயதான ஹேம்நாத் என்பவர், 8 வயது பேத்தி பிரசித்தா மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் பயணித்துள்ளார். குடும்பம் அசந்த நேரம் பார்த்து பாப்பா பெரிய வேலை பார்த்துவிட்டாங்க. நடுவானில் பைலட் கேபினில் திடீரென அவசரக்கால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
விமானத்துக்கு உள்ளேயும் அந்த சைரன் ஒலி கேட்டதால் எல்லோரும் பயந்து போயிட்டாங்க. உடனே விமானப் பணிப்பெண்கள் பதற்றத்துடன் ஓடி வந்து பயணிகளை ஒவ்வொருவராக கண்காணித்தனர். ஹேம்நாத்தின் பேத்தி பிரசித்தா சீட் கீழே அவசரக்கால உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த லைப் ஜாக்கெட்டை எடுக்க முயற்சி செய்வதை கவனித்தனர். பணிப்பெண்கள் லைப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி இருக்கைக்கு அடியில் வைத்து மூடிய பின்னர் சைரன் ஒலி நின்றது.
பாப்பா தெரியாமல் பட்டனை அழுத்திவிட்டதாக, ஹேம்நாத் மன்னிப்பு கேட்டார். இருந்தும் விமான விதிப்படி, சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஹேம்நாத் குடும்பத்தினரை போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை பட்டனை அழுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியானது. பிறகு அவரது குடும்பத்தை விடுவித்தனர். இதனால் கொஞ்சம் நேரம் சென்னை விமான நிலைய வட்டாரம், போலீஸ் அதிகாரிகளுக்கு அல்லு விட்டுப்போச்சு.