notification 20
Misc
#palani: பழனி கோவில் வாசல் கேரளாவை பார்த்து இருக்கிறதா? மலையாளிகள் தமிழகத்திற்குள் படையெடுப்பதன் சூட்சமம்!

லாக்-டவுனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், பழனி முருகனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. செமையான கூட்டம், நெடு நேரம் கியூவில் நின்று கால் கடுகடுத்தது. சரி பக்கத்துல இருக்கவங்ககிட்ட பேச்சு கொடுத்துகிட்டே நிற்போம் என்று பார்த்தால், முன்னாடியும் மலையாளம், பின்னாடியும் மலையாளம். என்னடா இது நம்ம ஊரு கோவிலுக்கு தானே வந்திருக்கோம். வரும்போது எல்லாம், மலையாள காற்று அடிக்குதே என்ற சந்தேகம் வந்தது. கேரளத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்தில் செட்டிலான எனது நண்பனின் "ஏன்டா உங்க ஊரு மக்களுக்கு பழனினா அவ்வளோ இஷ்டம்? " என்று கேட்டேன். அப்போ தான் மனதுக்கு நிறைவான விளக்கம் கிடைத்தது.

பழனி கோவில் வாசல் கேரளாவை பார்த்து இருக்குமாம். பழனி போல குமரி மாவட்டத்தில் இருக்கும் குமரக்கோவில் முருகனும் மலையாளிகளுக்கு மிக முக்கிய கடவுளாம். முருகன் பார்வை கேரளா பார்த்து உள்ளது, அதனால்தான் அது செழிப்பான ஊராக உள்ளது என்றும், அதற்காகவே கேரளா மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்றும் கூறுவார்கள். மலையாள நாயர் வம்சத்தின் கடவுள் நம்ம முருகன் தான். ஆனால் அங்கு அவருக்கு பெயர் சுப்ரமணியர்.

காது குத்து, கல்யாணம், குழந்தை பிறப்பு என்று எல்லா சுபவிஷேசங்களிலும் அங்கு முருகனுக்கு முக்கிய பங்குண்டாம். கேரளாவின் பல பகுதிகளில் சுப்ரமணியர் ஆலயத்தை காண முடியும். பழனிக்கு கேரளாவின் எல்லா பகுதி மக்களும் வருவதில்லை. தமிழக எல்லையை ஒட்டி உள்ள பாலக்காடு மாவட்டத்தின் மக்களே அதிகமாக வருகின்றனர்.

பழனிக்கு கேரளாவில் இருந்து வரும் கூட்டத்தை பார்த்த கேரள மாநில போக்குவரத்து கழகம், அம்மாநிலத்தின் பல பகுதியில் இருந்து பழனிக்கு நேரடியாக பஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறது. பாலக்காடு-பொள்ளாச்சி-பழனி என்று எட்டி பிடிக்கிற தூரத்தில் இருப்பதால், அதிக அளவிலான கேரள மக்கள் பழனியை நோக்கி வருகின்றனர். மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரள மக்களுக்கு முதல் கடவுளாக விளங்குவது முருகன் என்பதாலும், பழனி இந்த அளவுக்கு மலையாளிகளை ஈர்த்துள்ளது. மலையாளிகள் முன்னாள் ஒரு தமிழரே. ஆச்சரியத்திற்கு இடமில்லை!

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts