தலையில் முடி இல்லை என்றாலே, ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. அப்படிப்பார்த்தால், பிறவிக்குருடாக இருப்பவர்களை எல்லாம் என்ன சொல்வது? அவங்களுக்கு தலையில் முடி எப்படி இருக்கும் என்று கூடத்தெரியாது. அழகு என்றால் என்னவென்றே கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க. அவர்கள் உலகிற்குள் அவங்க சந்தோஷமா இருப்பாங்க. நமக்கு ஏன் அந்த மனநிலை வர மாட்டேங்குது. முதலில் நமக்கு இருப்பதை ரசிக்க பழகிக்கணும்.
என் கூட ஸ்கூல்ல ஒருத்தன் படிச்சான். அவனுக்கு கை, கால்களில் தோல் வறண்டு போய்விடும். பத்து வயதிலேயே முதுமை அடைந்த தோற்றம். இடையில் சிறு விபத்தில் சிக்கி, அதற்கு சில மருந்துகளை எடுத்துக்கொண்டதால், புருவமுடியும், தலைமுடியும் உதிர்ந்துவிட்டது. இத்தனை நடந்தும் ஒரு நாள் கூட அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அவனுக்கு மட்டும் எங்க பள்ளியில் தொப்பி போட அனுமதி கொடுத்தாங்க. ஸ்டைலா கண்ணாடி போட்டுக்குவான். அவனுக்கு இருந்த குறை யாருக்குமே தெரியல.
நாமாக தயங்கி தயங்கி எதையும் செய்தால் தான், நமக்கு ஒரு குறை இருப்பதே வெளியில் தெரியும். அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பேஜோஸ் பார்த்து இருக்கீங்களா? உலகில் முதல் பணக்காரரர் லிஸ்டில் வந்தவர். அவருக்கு இல்லாத காசா, பணமா? அவர் நினைத்தால் உலகில் பெரிய பெரிய முடி சிகிச்சை அளிக்கும் நிபுணர்களை கொண்டு, அழகான சிகை அலங்காரம் செய்ய முடியும். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை உணர்ந்ததால் தான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறார்.
இதுவே நம்ம ஊரா இருந்தா, நான் சொட்டையா இருக்கேனே எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? அழகு இல்லாமல் எப்படி வெளியில் செல்வது? என்கிற மாதிரியான மனப்பான்மை வந்திருக்கும். இதனால் தான், நம்ம ஊரில் முடிக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் அளவுக்கு நிலை மாறி இருக்கு. நம்முடைய வீக்னஸ் பாயிண்ட்டை சரியாக தெரிந்துகொண்டு பிசினஸ் மாடல் ஆக்கியிருக்காங்க. இன்னும் உங்களை தாழ்வாக கருதி, அந்த மாதிரியான குழியில் சென்று விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் நாமும் கூட ஜெஃப் பேஜோஸ் ஆகலாம். யாரு கண்டா?!