இந்த உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் பூமியை நோக்கி இழுக்கப்படுகின்றன. அவ்வாறு பூமியை நோக்கி இழுப்பதற்கு காரணமானது புவியீர்ப்பு விசை தான். ஒருவேளை புவியீர்ப்பு விசை என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால், நாம் விண்வெளியில் இருப்பது போல மிதந்து கொண்டிருப்போம் மற்றும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு நமது பூமியின் பல்வேறு விஷயங்கள் மாறலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை கண்டறிந்தவர் நியூட்டன் என்ற அறிவியல் அறிஞர்.
ஒரு சமயம் நியூட்டன் ஆப்பிள் தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, களைப்பு மிகுதியால் ஒரு மரத்தின் அடியில் அமரும் சூழ்நிலைக்கு வருகிறார். அப்போது எதேட்சையாக மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த ஆப்பிள் அவரது தலை மீது விழுகிறது. சுதாரித்து எழுந்த நியூட்டன், இந்த பழம் மரத்தில் இருந்து விழுவதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க துவங்குகிறார். அதனை பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்கிறார். அதன் விளைவாக புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்றை கண்டறிந்துள்ளார். இவ்வாறு தான் நமது சிறு வயதில் நமக்கு புவி ஈர்ப்பு விசை குறித்து விளக்கியிருப்பார்கள். நாமும் அதனை நம்பியிருப்போம். ஆனால் இது ஒரு கட்டுக்கதை என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தார் என்பது உண்மை. ஆனால் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த கால கட்டத்தில் புபானிக் பிளேக் என்ற ஒருவித பிளேக் நோய் மக்களை தாக்கியிருந்தது (தற்போது இருக்கும் கொரோனவை போல). அதன் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே வசிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் (தற்போதைய லாக்டவுன் போல). நியூட்டனும் அந்த சமயத்தில் வீட்டுக்குள் தான் இருந்துள்ளார். அப்படியென்றால் நியூட்டன் பற்றிய ஆப்பிள் கதை உருவாக காரணம் என்ன?
நியூட்டன் தனது கண்டுபிடிப்பை மக்களுக்கு புரியவைப்பதற்க்காக மேற்கொண்ட ஒரு எடுத்துக்காட்டு தான் அந்த ஆப்பிள் மரத்தின் கதை. அவர் உவமையாக சொன்ன கதை காலப்போக்கில் உண்மையாக மாறிவிட்டது. விஷயம் புரியாமல் நாமும் ஆப்பிள் மரத்துக்கு அடியில் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.