உலகின் பல்வேறு இடங்களில் தேர்தல் என்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறை. அதாவது தங்களை ஆளப்போகும் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறையினை தான் தேர்தல் என்கிறோம். மன்னராட்சி காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை, ஆனால் மக்களாட்சி நடைமுறையில், மக்கள் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தி அவர்கள் மூலமாக தங்களின் குறைகளை அரசுக்கு தெரியப்படுத்துவார்கள்.
இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், நன்கு பரிட்சயமான நபரை தேர்வு செய்யும்பட்சத்தில், அவர் தொகுதிக்குள் இருக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று அதனை தீர்த்து வைப்பார். ஆனால் இந்த வேட்பாளருக்கு வேண்டியதை கொடுத்துவிட்டால் போதும், உங்களை மட்டுமல்ல உங்கள் குறைகளை கூட கண்டுகொள்ள மாட்டார். அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வேட்பாளர் தான் மக்காகோ டியாஓ.
அதாவது இந்த வேட்பாளருக்கு தான் தேர்தலில் நிற்கிறோம் என்று கூட தெரியாது. இவர் வெற்றி பெற்று வந்தாலும் மக்களுக்கு எதுவும் செய்யப்போவது இல்லை என்று தெரிந்தும் கூட மக்களின் பேராதரவுடன் தேர்தலில் நிறுத்தப்பட்டார். யார் சாமி இவர்? எனக்கே பாக்கணும் போல இருக்கு! என்று தோன்றுகிறதா? இதோ பாருங்கள். இவர் தான் மக்காகோ டியாஓ.
பிரேசில் நாட்டில் 1988-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில், அப்போதைய தலைநகர் ரியோடி ஜெனிரோவில் தான் மக்காகோ டியாஓ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். உலகத்திலேயே தேர்தலில் போட்டியிட்ட ஒரே குரங்கு மக்காகோ டியாஓ என்று சொன்னால், அதன் இனத்துக்கே மிகப்பெரும் மரியாதையாகத்தான் இருக்கும். அந்த கால கட்டத்தில் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளின் தொந்தரவுகள் மக்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கியிருந்தது.
தேர்தலை தவிர்த்து விடலாமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் மக்காகோ டியாஓவை வேட்பாளராக முன்மொழிந்த நிலையில், அந்த நாட்டு தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் மக்காகோ டியாஓ 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றதாம். ஒரு வேளை இந்தியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற நிகழ்வு நடத்தப்பட்டால், நிச்சயம் நிறைய மக்காகோ டியாஓக்கள் வெற்றி பெறலாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.