கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்றவற்றில் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பலரும் புகழ்பெற்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது உச்சத்துக்கு சென்றுள்ளனர். சில வருடங்களுக்கு முன் சாதாரண டிக் டாக் பெண்ணாக இருந்து தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோயினாக மாறியுள்ளவர் தான் மிருணாளினி ரவி.
கோலிவுட்டில் இவருடைய வளர்ச்சி சக இளம் நடிகைகளையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஒரு டிக் டாக் பிரபலத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று எல்லோரும் பொறாமைப்படும் அளவுக்கு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. விஷால் ஜோடியாக எனிமி, சசிகுமார் ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ஜாங்கோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளதால் இப்போது இவர் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
இதில் எனிமி படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் இவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்துவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் ஒரு மில்லியனை கடந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாவில் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மிருணாளினி ரவி.
அதைப்பார்த்து அவரது ரசிகர்கள் பூரித்துப்போய் பாராட்டி வருகின்றனர். அடுத்த வருடமும் இவர் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புள்ளது. விஷால், சசிகுமார் இவர்களை தாண்டி அடுத்தகட்ட பெரிய நடிகர்களுடன் மிருணாளினி ஜோடி சேருவாரா? புத்தாண்டு பிறக்கட்டும் தெரிந்து கொள்வோம்.