notification 20
Exquisite
#Marshal Nesamony: வடிவேலு காமெடி தான்.. இவர்தாம்பே ஒரிஜினல் நேசமணி - மறைக்கப்பட்ட மர்மங்கள்.!

காண்ட்ராக்டர் நேசமணி ஒரு கற்பனை கதைப் பாத்திரம். குமரித் தந்தை மார்ஷல் நேசமணி ஒரு ரியல் ஹீரோ. "திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு பைத்தியக்காரர்களின் விடுதி" இப்படிச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர். காரணம் திருவாங்கூர் மன்னர் ஆட்சியில் தலை விரித்தாடிய சாதிக் கொடுமை. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பார்ப்பதே தீட்டு என்று கடைபிடிக்கப்பட்ட சமஸ்தானம் அது. இப்போதைய கன்னியாகுமரி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள்தான் இருந்தது.

பெரும்பான்மை மக்கள் தமிழர்கள். ஆனால் மலையாளம் கட்டாயக் கல்வி ஆக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உலக வரலாற்றில் இல்லாத அளவு கொடுமையை சந்தித்தனர். வரிகள் கொடூரமாக விதிக்கப்பட்டன. குடை வைத்திருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். குடிசை அல்லாது வீடு கட்டினால் வரி. அவ்வளவு ஏன் பெண் மார்பு அளவைப் பொறுத்து வரி கட்ட வேண்டும். "முலை வரி" என்று பெயர். முலை வரிக் கொடுமையை எதிர்த்து தன் முலைகளை அறுத்தெரிந்தார் பெண் ஒருவர். பெண்கள் பிரேசியரோ, பிளவுசோ அணியக் கூடாது.

இவர்களில் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் சமஸ்தானத்திற்கு திருமணம் ஆன புதிய உடையோடு செல்ல வேண்டும். அங்கே சாணி கரைத்து வைக்கப்பட்டிருக்கும். ஊர் மக்கள் முன்னே புது மணத் தம்பதியர் மீது கரைத்த சாணம் ஊற்றப்படும். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் நாடார்களும், பட்டியலினத்து மக்களும் தான். அப்போது நாடார்கள் பட்டியலினத்துக்கும் தாழ்த்தப்பட்டிருந்தார்கள். ஐயா வைகுந்தர் வரவுக்குப் பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாதி வெறிக்கு எதிரான போர் தொடங்கியது.

பின் 1956 ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கன்னியாகுமரி, பீர் மேடு, தேவி குளம், இடுக்கி ஆகியவற்றை தமிழ் நாட்டோடு இணைக்கப் பெரும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. குமரியைத் தமிழ் நாட்டோடு இணைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் மார்ஷல் நேசமணி ஐயா அவர்கள் திருத்தணி, சென்னையைத் தமிழ் நாட்டுடன் இணைக்கப் போராடியவர் ம.பொ.சிவஞானம் ஐயா. மார்ஷல் நேசமணி ஐயா தலைமையிலான போராட்டத்தின் விளைவாக குமரி தமிழ் நாட்டுக்கே தரப்பட்டது. காண்ட்ராக்டர் நேசமணிகளால் சிரிக்க வைக்க முடியும். மார்ஷல் நேசமணிகளால் மட்டுமே அதற்கான விடுதலையைப் பெற்றுத் தர முடியும்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts