ஒருவரது வாழ்க்கையில் முக்கியமான விஷயம் திருமணம். அது ஏன் என்றால், ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைத்து அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை துவங்க ஆதாரமாக இருக்கிறது இந்த திருமணம். அது சரி, இது எப்படி நிச்சயிக்கப்படுகிறது. நமது தமிழ் கலாச்சாரத்தின்படி, ஜாதகம் பொருந்தி வந்தால் பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வெறும் ஜாதகம் மட்டும் தனிப்பட்ட இருவரது குடும்ப வாழ்க்கையை தீர்மானித்து விடுமா? நிச்சயமாக இல்லை.
எத்தனையோ குடும்பங்களில் ஜாதக பொருத்தம் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றாலும், ச ண்டை சச்சரவுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. 10 பொருத்தங்களும் சரியாக பார்த்து செய்து வைக்கப்பட்ட எவ்வளவோ திருமணங்கள் வி வாகரத்து பெற்றுள்ளதை நாம் இன்னும் கேள்விப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் சில இடங்களில் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவ்வளவு ஏன்? காதல் திருமணம் செய்யும் யாரேனும் ஜாதகம் குறித்து கவலையடைகிறார்களா? பிறகு ஒரு குடும்ப வாழ்க்கையை தீர்மானிப்பதில் எந்த பொருத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது?
பொதுவாக குடும்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சரி வர வாழ மனப்பொருத்தம் மிகவும் முக்கியம். அதாவது உங்கள் ஜாதகம் பொருந்தாமல் இருந்தாலும் கூட மனப்பொருத்தம் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் நீங்கள் சந்தோசமாக வாழமுடியும். இந்த பொருத்தம் மட்டும் இல்லையென்றல் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை அமைந்தாலும் உங்களால் சரி வர வாழ இயலாது. அது என்ன மனப்பொருத்தம்? இதுவரை கேள்விப்பட்டது இல்லையென்றால் இனிமேலாவது தெரிந்துகொள்ளுங்கள்.
ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் பிணைக்கப்பட எந்த காரணம் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ இருவருக்கும் மனப்பொருத்தம் அவசியம். மனப்பொருத்தம் உங்களின் மனதை பொறுத்த விஷயம். அதாவது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருமே அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து வாழவேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும். யார் விட்டுக்கொடுப்பது என்ற கேள்விகளை மறந்து, நான் முதலில் விட்டுக்கொடுக்கிறேன் என்று மனதார எண்ண வேண்டும். இப்படி இருக்கும்போது தான் இல்லறம் நல்லறமாக இருக்கும்.