சாரதா அக்காவுக்கும் அவங்க மருமகளுக்கும் போன வாரத்துல இருந்தே ஏதோ சண்டை வந்து கொண்டே இருந்தது. எங்க தெருவுல கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த விஷயம் இது தான். நேத்து போலீஸ்காரங்க வரளவுக்கு பிரச்சனை முத்திப்போயிடுச்சி போல. விஷயம் என்னன்னு விசாரிக்கறப்ப, சாரதா அக்கா எங்களுக்கு தெரிஞ்சி எங்க ஏரியாவுல ஒரு 10 வருசமா குடி இருகாங்க. அவங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்காங்க. ரெண்டு பேருக்குமே நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிட்டாங்க.
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் வீடும் கட்டினாங்க. சொந்த நிலத்துல இருந்த பழைய வீட்ட இடிச்சிட்டு புதுசா கட்டி இருந்தாங்க. பழைய வீடு சாரதா அக்கா பேருல தான் இருந்துச்சி. சரி இதுல என்ன பிரச்னை? அதாவது, பழைய வீட்ட இடிச்சிட்டு கட்டறப்ப மருமகளோட நகையை வித்து தான் கட்டி இருக்காங்களாம். கணக்குப்படி பாத்தா இப்ப இருக்க நிலம் சாரதா அக்கா பேருலயும், வீடு கட்ட கொடுத்த பணம் அவங்க மருமகளோடதாகவும் இருக்கு. இப்ப வீட்ட யாரு பேருல கிரயம் பண்ணறதுன்னு தான் பிரச்சனை. சாரதா அக்கா அவங்க பேருல கிரயம் பண்ண சொல்லி பிடிவாதமா இருக்காங்க, அவங்க மருமக இதுக்கு ஒத்துவரல. இதனால ஒரு வாரமா பிரச்சனையாகி இப்ப பஞ்சாயத்து பண்ண போலீஸ்காரங்க வந்துருக்காங்க.
கொஞ்ச நேரத்துல இவங்க பிரச்சனையை முடிச்சி வெச்சிட்டு போலீஸ் கிளம்பியது. போலீஸ்காரங்க என்ன சொல்லிருக்காங்கன்னா, வீட்ட வித்துடுங்க வர்ற பணத்துல பாதி சாரதா அக்காவும் மீதி அவங்க மருமகளும் எடுத்துக்கணும். எவ்வளவு விலைக்கு போனாலும் சரி, நகையை பத்தி பேசி மருமகளும், நிலத்தை பத்தி பேசி சாரதா அக்காவும் சண்டை போடக்கூடாது. ஒரு மாசத்துல இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ள வேண்டும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்களாம்.
இப்ப எங்க ஏரியாவே சாரதா அக்காவையும், அவங்க மருமகளையும் பற்றித்தான் மாறி மாறி பேசிகிட்டு இருகாங்க. காரணம் ரெண்டு பேத்துக்குள்ளயும் கொஞ்சம் அனுசரணை இருந்திருந்தால் சொந்த வீடாவது மிஞ்சி இருக்கும். இப்ப சண்டை போட்டதனால வீடும் போனது, உறவும் முறிந்தது. எது எப்படியோ உடைஞ்ச கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாதது போல தான் இதுவும்.