மாமன் மச்சான் நடுவில் தான் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடாது என்று பெரியவங்க சொல்வாங்க. ஆனால் அண்ணன் தம்பிக்கு நடுவில் கூட கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடாது என்று எங்க அப்பா மூலமாகத்தான் எனக்கு புரிய வந்தது. பணம் படுத்தும் பாடு அப்படி இருக்கிறது. பணம் வாங்குறவரைக்கும் இனிக்க இனிக்க பேசும் சொந்தக்காரங்க அந்தப்பணத்தை திரும்ப கேட்டால் தங்களுடைய சுய ரூபத்தை அப்போது தான் காட்டுகின்றனர்.
என்னுடைய பெரியப்பா தன்னுடைய மகன் திருமணத்துக்காக 25000 ரூபாயை என் அப்பாவிடம் கடனாக வாங்கினார். திருமண செலவுக்காக கேட்கின்றனர். எனவே கொடுத்து உதவலாம் என்ற நல்லெண்ணத்தில் எங்க அப்பாவும் பணத்தை கொடுத்தார். பணம் வாங்கும்போது சிரித்துக்கொண்டு வாங்கிவிட்டார் பெரியப்பா. வாங்கிய பணத்தில் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார்.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை. உடன் பிறந்த சகோதரன் என்பதால் க றாராக கேட்காமல் இரண்டு வருடங்கள் பொறுமையாக காத்திருந்தார் என்னுடைய அப்பா. இதற்கு மேலும் காத்திருந்தால் அது சரிப்பட்டு வராது என்று நினைத்து ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு சென்று நேரடியாக கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு கேட்டார்.
பணம் வாங்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்போது பெரியப்பா முகத்தில் இல்லை. இத்தனைக்கும் எங்கப்பா அசல் தொகையை மட்டும் தான் கேட்டார். வெளியில் கடன் வாங்கியிருந்தால் வட்டியும் சேர்த்துக்கொடுத்தாக வேண்டும். சொந்த அண்ணனிடம் கொடுத்த பணத்தை திரும்பக்கேட்பது நியாயமா? நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னால் உடனடியாக இப்போது பணத்தை தர முடியாது என்று பெரியப்பா கூறினார்.
சொந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் இப்போது உனக்கு தனி குடும்பம் உள்ளது. அதுபோல எனக்கும் தனியாக மனைவி குழந்தைகள் எல்லாம் உள்ளனர். கைசெலவுக்கு 50, 100 என்று கொடுப்பது வேறு. 5000, 10000 என்று கொடுத்து உதவுவது வேறு. 25000 ரூபாயை கல்யாண செலவுக்கு கடனாக கொடுக்குமாறு தான் நீங்க கேட்டீங்க. இனாமாக பணம் தா என்று நீங்க கேட்கவில்லையே? என்று என்னுடைய அப்பா அவருக்கு பதில் தந்தார்.
வாக்குவாதம் முற்றிப்போய் ச ண்டையாக வெ டித்து விட்டது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்குள் எங்க அப்பா படாத பாடு பட்டுவிட்டார். அண்ணன் தம்பியாக இருந்தாலும் எல்லாம் ஒரு கூட்டுக்குள் இருக்கும் வரை தான் ஒற்றுமையாக இருக்க முடியும். அவரவர் தனித்தனி குடும்ப வாழ்க்கைக்கு சென்ற பிறகு கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால் உறவு கண்டிப்பாக அ றுந்து தான் போகும்.