அதென்ன விட்டால்கு அப்புறம் கேள்விக்குறி என்று கேட்கறீங்களா..? அது தாங்க நம்ம லைப்பே.. இருபது வயதை கடந்து விட்டால் வாழ்க்கை கேள்விக்குறியோடு தான் தொடங்குகிறது. சிறு வயதில் இருந்து ஆடிய ஆட்டமெல்லாம், அதிலிருந்து தான் ஓய்வுக்கு வர ஆரம்பிக்கிறது.
பலருக்கும் இந்த வயது கல்லூரி பருவத்தின் ஒரு பகுதியை முடிக்கும் தருணமாக இருக்கும். அதுவே சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இன்னும் கொஞ்சம் நாள் சுதந்திர பறவைகளாக சுற்ற வாய்ப்பு கிடைக்கும். அதுவும் வெகு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் முக்கால்வாசி வாசி குடும்ப பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும்.
அதிலும் இரண்டாவது வருடத்தில் துளிர் விட்ட கல்லூரி காதலில் பலவும், இந்த சமயத்தில் பிரேக் அப்பில் வந்து நிற்கும். இதை சமாளிப்பதா, இல்லை வாழ்க்கைக்கு வழி தேட ஏதாவது செய்வதா என்று முடிவெடுப்பதற்குள் பசங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும்.
பெண்களுக்கு செல்லவே தேவை இல்லை. இந்நேரம் ஜாதகம் கொடுத்திருப்பார்கள். நாலு,அஞ்சு ரெடியாக இருக்கும். "புள்ளை படிப்பு முடிக்கட்டும் பாத்துக்கலாம்" என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி காத்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் இந்த வயதில் ஆண், பெண் மனம் வெளியுலக தேடலையே விரும்பி இருக்கும். சமுதாயம் அப்படி விட்டு விடுமா என்ன..? அதற்குள் ஒரு கால் கட்டு போட பெண்களுக்கும், செட்டில் ஆக வேண்டிய நிலைக்கு ஆண்களும் தள்ளப்பட்டு விடுவர்.
கூடவே பெற்றோர்களின் உடல் நலத்திலும் இடர்பாடுகள் வர ஆரம்பிக்கும், ஒரு பக்கம் சம்பாதிக்கணும், ஒரு பக்கம் செட்டில் ஆகணும், ஒரு பக்கம் பெற்றோர்களையும் கூடவே கரை சேர்க்கனும், இன்னொரு குடும்பம் வேறு வந்து விடும் அதன் போக்கிலும் பயணிக்கணும், அப்பப்பா எத்தனை சோதனைகள் சாமி.
கயிறு மேல் நடக்க விட்டு விட்டு, கீழே கத்திகளை பரப்பி விட்டது போலத்தான் நகரும் இருபதுக்கு அப்புறம் நகரும் வாழ்க்கை. இதையெல்லாம் சமாளிக்க கற்றுக்கொண்டால்..? பிறகென்ன அதுவே பழகிரும்...ஹி ஹி ஹி