நேற்று நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. 11 மணி வரைக்கும் கண் முழிச்சு மேட்ச் பார்த்த அத்தனை பேரும் அப்படியே ஆடிப்போயிட்டாங்க. காரணம் யானை பலம் கொண்ட இங்கிலாந்து அணியை பூனை என்று நினைத்த நியூசிலாந்து அணி வீழ்த்திவிட்டது.
நாங்க பூனை கிடையாது பங்காளி, புலி என்று அனைவருக்கும் நிரூபித்துள்ளனர் நியூசிலாந்து அணி வீரர்கள். இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக விளையாடவில்லை. மற்றொரு அதிரடி மன்னன் ஜாஸ் பட்லரும் நேற்று அதிக ரன்களை அடிக்காமல் அவுட்டாகிவிட்டார். இருப்பினும் ஒரு முனையில் சூப்பராக விளையாடி இங்கிலாந்து அணி 166 ரன்களை சேர்க்க நம்ம மொயின் அலி உதவினார்.
அபுதாபி ஆடுகளத்தில் 167 ரன்களை சேஸ் செய்வதே சிம்மசொப்பனம் தான் என்று வர்ணனையாளர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதற்கு தகுந்தாற்போல் நியூசிலாந்து அணியில் கப்தில் மற்றும் வில்லியம்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இங்கிலாந்திடம் நியூசிலாந்து சரண்டர் ஆகிவிடும் என்று தான் அனைவருமே நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றினார் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம். இங்கிலாந்து அணியின் ஜோர்டன் வீசிய ஒரு ஓவரில் 23 ரன்கள் போனஸ் போல கிடைத்ததால் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறிப்போனது.
மறுபக்கம் பதுங்கிப்பதுங்கி ஆடிக்கொண்டிருந்த மற்றொரு நியூசிலாந்து வீரர் மிட்செல் திடீரென பாயும் புலியாக மாறியதால் 19 ஓவரிலேயே ஆட்டம் முடிந்து போனது. திறமை, அனுபவம், பலம் என்று எத்தனையோ விஷயங்கள் இருந்தும் இங்கிலாந்து அணி கடைசியில் தோற்றுப்போனது. இதனால் தொடரிலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று இங்கிலாந்து அணியிடம் மண்ணைக்கவ்விய நியூசிலாந்து தற்போது அதற்கு பழி தீர்த்துக்கொண்டது. பூனை என்று நினைத்த நியூசிலாந்து இப்போது புலியாக மாறியுள்ளதால் பைனலுக்கு ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் யார் வந்தாலும் ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.