கயானாவில் அமைந்துள்ள கெய்டூர் நீர்வீழ்ச்சியானது நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. பார்ப்பதற்கு சொர்க்கம் போல இருக்கும், ரம்மியமான அழகான அனுபவத்தை கொடுக்கும் என்று ஒரு இடத்தை பற்றி பலரும் வர்ணித்து கதை கதையாக கூறிக்கொண்டே இருப்பர். அப்படி ஒரு இடம் தான் இந்த கெய்டூர் நீர்வீழ்ச்சி.
இந்த இடத்தைப் பற்றி ஆயிரம் பேர் வர்ணிப்பதை கேட்டாலும் சரி, ஆயிரமாயிரம் புகைப்படங்கள் மூலம் பார்த்தாலும் சரி, நேரில் சென்று நீங்கள் பார்த்தால் மட்டுமே ஒரு முழுமையான உணர்வை பெற முடியும். கெய்டூர் தேசிய பூங்காவுக்குள் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பொட்டாரோ ஆற்றிலிருந்து சற்றே விலகிக் காணப்படுகிறது.
கயானாவுக்கு எப்போதாவது பயணம் செய்ய நேர்ந்தால் தவறாமல் இந்த நீர்வீழ்ச்சியை நீங்கள் சென்று பார்க்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் மிகப்பெரிய ஒற்றைத்துளி நீர்வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. 226 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 90 முதல் 105 மீட்டர் வரை அகலமாக இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் 1930ம் ஆண்டு தேசிய பூங்கா நிறுவப்பட்டது. பிரிட்டனை சேர்ந்த புவியியலாளரான பாரிங்டன் பிரவுன் என்பவர் முதன் முதலில் 1870ம் ஆண்டு இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து வெளி உலகிற்கு தெரிவித்தார்.