தங்க நகை மோகம் யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது? இன்றைக்கு பெண்களை தாண்டி, ஆண்களும் கொத்துக்கொத்தாக நகை அணிந்து கொண்டு நிற்கும் காட்சிகளை சோஷியல் மீடியாவில் நிறையவே பார்க்க முடியும். ஒரு காலத்தில் பெண்களுக்கே உரித்தானதாக இருந்த தங்க நகை மோகம், மெல்ல மெல்ல ஆண்கள் பக்கமும் பார்த்து அடிக்க ஆரம்பித்துள்ளது. பெண்களை பொறுத்த வரையில் நகை தேர்வு செய்வதில் பொறுமை இருக்கும். ஒரு நாளே ஆனாலும், தெருவில் உள்ள நகை கடை முழுக்க ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, இறுதியாக மனதுக்கு பிடித்த நகையை தேர்வு செய்வார்கள்.
ஆண்கள் அப்படியில்லை. அதிகபட்ச பர்சேஸ் கால அளவே ஒரு மணி நேரமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது தரமான நகைகளை தேர்வு செய்கிறார்களா என்பது சந்தேகமே. முதலில் தங்கம் வாங்க சொல்லும் நபராக இருந்தால், ஒரு சில விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான நகையை தேர்வு செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
செயினை பொறுத்தவரைக்கும் இரண்டே வகை தான். ஒன்று மெஷின் செயின், இன்னொன்று கையால் செய்யப்பட்ட செயின். முழுக்க முழுக்க இயந்திரத்தினால் செய்யப்படும் "மெஷின் செயின்" பார்க்க எளிதானதாக தோன்றும். எடையும் மிகக்குறைவாக இருக்கும். ஆனால் ரொம்ப நாளுக்கு உழைக்காது. சீக்கிரம் அறுந்து போகும் தன்மையுடையது. சின்ன பழுது என்றாலும் கூட பற்றவைத்து மீண்டும் ஒட்ட வைப்பது சிரமம். மெஷினில் செய்யப்படும் செயின், முழுக்க முழுக்க பவுடர் சால்டரிங் கொண்டு ஒட்டவைக்கப்படுவதால், அதன் வலு குறைவானதாக இருக்கும்.
அடுத்து கையால் செய்யப்படும் செயினுக்கு வருவோம். அனுபவம் வாய்ந்த பொற்கொல்லரால் மட்டுமே இது மாதிரியான செயின்கள் செய்ய முடியும். செயினில் உள்ள ஒவ்வொரு வளையமும் தனித்தனியாக பற்றவைக்கப்பட்டு, அது ஒன்றாக சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மற்ற எந்த செயினை காட்டிலும் இதற்கு வலு அதிகம். சுத்தமான 24 கேரட் தங்கத்துடன், ஜிங்க் உலோகம் சேர்க்கப்பட்டு கம்பியாக மாற்றி பற்றவைக்கப்படுகிறது. ஒவ்வொரு வளையமும் தனிப்பட்ட முறையில், செய்து இணைக்கப்படுவதால் நீண்ட நாள் உழைக்க கூடியது. இரண்டுக்கும் விலை வித்தியாசம் இருக்கலாம். இதில் தரமானது எது என்பதை தேர்வு செய்யும் உரிமையை உங்களிடமே கொடுத்து விடலாம்.