தலைக்கு குளித்துமுடித்தவுடனே, துண்டை தலையில் போர்த்தி, பரப்பரவென துவட்டினால் தான் குளித்த முடித்த திருப்தியே கிடைக்கிறது. நான் வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிப்பதில்லை. அப்போதெல்லாம் குளிச்ச ஃபீல் இருப்பதே இல்லை. ஏதோ கை, கால், முகம் கழுவின மாதிரி உணர்வே ஏற்படும். தலைக்கு குளிப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், முடியின் ஈரத்தை சரியாக உலர்த்த தெரியாவிட்டால், ரொம்ப சிக்கலாகிவிடும். அரைகுறையா துவட்டினால், பின்பக்க கழுத்தில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். அதனால் தேமல் மாதிரி ஸ்கின் அலர்சி வரும்.
எப்போ தலைக்கு குளித்தாலும், ஈரப்பதம் முழுவதுமாக போகும் வரையில் உலர்த்திவிட்டு, பிறகு ஆடை கழுத்தை ஒட்டியவாறு போடக்கூடிய ஆடைகளை அணியலாம். ஆனால் உடனே தலைமுடியை காயவைக்க வேண்டும் என்பதற்காக, பியூட்டி பார்லர்களில் உள்ளதைப்போல ஹேர் டிரையர் என்னைக்கும் வாங்கிவிடக்கூடாது. அது தலையில் இருக்கும் ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சிவிடும். அங்கிருந்துதான் அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பமாகிறது. முடி வளைத்து கொடுக்கும் அளவிற்கு கூட ஈரப்பதம் இல்லாமல் போய்விடும்.
அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிக்கும் போது, முடியில் உள்ள பளபளப்புத் தன்மை போய்விடும். சீக்கிரம் வறண்டு நாளடைவில் முடி உடைய ஆரம்பித்து விடும். பியூட்டி பார்லராக இருந்தாலும், வீடாக இருந்தாலும், மாதம் இரு முறை அல்லது அதிகப்பட்சம் 4 முறை, அதற்குமேல் டிரையர் உபயோகிக்கக்கூடாது. நம்முடைய தலைமுடி ரொம்ப ரொம்ப மென்மையானது. ஈரமான தலைமுடியை நாம் துவட்டிக்கொண்டிருக்கும் முறையே தப்பு தெரியுமா..?
பிறகு என்ன செய்வது? முறைப்படி தலைமுடியை உலர்த்த வேண்டும் என்றால், துணியால் ஒற்றி தான் உலர்த்த வேண்டுமாம். அதே போல தலை வாரும் போதும், மென்மையாகவே வார வேண்டும் ஆனால் இதையெல்லாம் செய்ய நமக்கு போதிய நேரமோ, பொறுமையோ கிடையாது. அப்படி அவசர அவசரமாக கடமைக்கு செய்பவர்களின் முடி இயற்கை பொலிவுடன் இருக்காது. எவ்வளவு தூரம் நாம் ட்ரையர் உபயோகிப்பதை குறைக்கிறோமோ அந்தளவு நாம் முடியை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.