எங்க தாய் மாமன் வகையறா சொந்தத்தில் ஒரு பெண்ணுக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. வெறும் ஆறு மாத இடைவெளியில் குடும்பம் ரெண்டு பட்டுக்கிடக்கிறது. காரணம் இந்த பாழாப்போன வாட்ஸ்ஆப். பொண்ணுக்கு இளம் வயசு என்பதால், பையன் கூட சண்டை போடும் போதெல்லாம் தான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை ஸ்டேட்டஸ்சாக வைத்திருக்கிறாள். காலேஜ் படிக்கும் போது வெச்சா, அது நண்பர்களோடு மறைந்துவிடும்.
திருமணத்திற்கு பிறகு என்றால், எல்லா சொந்த பந்தமும் பார்ப்பாங்க. மாப்பிள்ளை தரப்பு சொந்தங்கள் பார்த்து, பெண்ணிடம் நேராக கேட்டு, அதற்கு சப்போர்ட் பண்ண பெண் வீட்டார் வந்து, ஏகப்பட்ட ரகளை ஆயிருச்சு. கொஞ்சம் இந்த வாட்ஸ்ஆப்பை அளவோடு பயன்படுத்தினால், பல குடும்பங்கள் தப்பிக்கும். முதலில் தெரிந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்து ஸ்டேட்டஸ் போடுவதை விட, எவ்வளவு நெருக்கம் என்றாலும் அவர்களை தனியே அழைத்து பேசினால் மதிப்பு வேறு லெவலில் இருக்கும்.
அவர்களுடன் நம்முடைய நேரத்தை செலவழிக்கணும். ஒருவருக்கு நாம் தரக்கூடிய மிக பெரிய பரிசு நமது நேரம். ஒரு சிலர் அடுத்தவர்கள் பிறந்த நாள் வாழ்த்து சொன்னத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அத்தனையும் ஸ்டேட்டஸ் வைப்பாங்க. என்னுடைய நட்பு வட்டாரம் பெரிது என்பதை, அதன் மூலம் காட்டத்தேவையில்லை. ஸ்டேட்டஸில் ட்ரெயின் ஓட்டுபவர்களை பலருக்கும் பிடிக்காது. நீங்க வைத்துள்ளதை முழுசாக்கூட பார்க்க மாட்டாங்க.
உங்களுக்கு மற்றவர் கொடுத்த பரிசு பொருட்களின் போட்டோவை பகிர்ந்து கொண்டால், திரும்ப அதனை வைத்தே பல எதிர்பார்ப்புகளை உங்கள் நட்பு வட்டாரம் உருவாக்கிவிடுவார்கள். உங்கள் துணையுடன் நேரும் இன்ப துன்பங்களை ஸ்டேட்டஸ் போட்டு ஊருக்கே விளம்பரப்படுத்தாதீர்கள். சில நேரங்களில் உணர்ச்சி ரீதியாக குறி வைத்து, மூன்றாவது நபர் உங்க விவகாரத்தில் தலையிட வருவாங்க. இதெல்லாமே என்னுடைய அனுபவத்தில் பல சிக்கல்களை உண்டாக்கியவை. உங்களுக்கு தெரிந்தவை வேறு ஏதாவது இருந்தாலும் கூறலாம்.