பொதுவாக குழந்தைகள் இளம் வயதில் அதிக துடிப்போடும், விளையாட்டு வேகத்தோடும் இருப்பது இயற்கையானது தான். தற்போது இருக்கும் வேகமான உலகத்தில் குழந்தைகள் வெறும் படிப்பு இயந்திரங்களாகவே மாற்றப்பட்டுள்ளனர். பள்ளி சென்றால் தினமும் 6-7 மணி நேரங்கள் கடிவாளம் கட்டிய குதிரையை போல படிப்பு தான் அவர்களின் வேலையாக போகிறது. மேலும் முக்கியமான பாடங்களை நடத்துவதற்காக விளையாட்டு நேரமும் எடுத்துக்கொள்ளப்படும் போது, குழந்தைகளின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அவர்கள் பள்ளி முடிந்ததும் வேகமாக வீட்டை நோக்கி ஓடத்தானே செய்வார்கள்.
அவர்களை சோதிக்கும் மற்றுமொரு கடினமான விஷயம் என்னவென்றால் வீட்டுப்பாடங்கள். அது அவர்களை மட்டுமல்ல, அவர்களின் பெற்றோரையும் வெகுவாகவே சோதித்து விடுகிறது. சரியாக வீட்டுப்படங்களை செய்யவில்லை என்றால் அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம் பதில் சொல்ல முடியாமல் திணறும் குழந்தைகள், உண்மையில் மிகவும் பாவப்பட்ட ஜீவன்களாகும். வீட்டுப்பாடத்தில் இருப்பதை குழந்தைகளுக்கு சரியாக சொல்லித்தர தெரியாத பெற்றோர்களும் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக குழந்தைகள் டியூஷன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். பள்ளியில் இருந்து வந்த குழந்தைகள் உடனடியாக டியூஷனுக்கு அனுப்பப்படும் போது அவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது.
பிள்ளைகளை புத்தக புழுக்களாக வைத்திருக்க முக்கியமான காரணம் இந்த வீட்டுப்பாடங்கள் தான். எப்படியென்றால், இது அவர்களின் விளையாட்டு வேகத்தை மிகவும் குறைத்து விடுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடல் உழைப்பற்று, மூளை மட்டுமே அதிக வேலையை செய்கிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை தினங்களுக்கு முந்தய நாட்களில் வழங்கப்படும் வீட்டுப்பாடங்கள் உண்மையில் பொதி சுமக்கும் கழுதைகளாகவே குழந்தைகளை மாற்றியுள்ளது என்று சில வல்லுனர்களும் கருத்து கூறியுள்ளனர். வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்தால் தானே, குழந்தைகளின் அறிவு வளரும் என்று நினைப்பவரா நீங்கள்? உண்மையில் குழந்தைகளை தண்டிப்பதற்காக கொடுக்கப்பட்ட தண்டனைதான் இந்த வீட்டுப்பாடம் என்பது உங்களுக்கு தெரியுமா?
1905-ம் ஆண்டில் ரொபோர்டோ நெவில்ஸ் என்ற இத்தாலிய ஆசிரியர் வகுப்பில் சுட்டித்தனமாகவும், மிகவும் குறும்பு செய்துகொண்டும் இருந்த ஒரு மாணவனை தண்டிக்கும் வகையில், பள்ளியில் நடத்தப்பட்ட பாடத்தோடு தொடர்புடைய சில வேலைகளை வீட்டில் இருக்கும் நேரத்தில் முடித்து வருமாறு தெரிவித்து இருக்கிறார். ஒருவழியாக திணறித் திணறி அந்த மாணவர் வீட்டுப்பாடத்தை முடித்துவிட, அடுத்த நாள் முதல் வகுப்பில் எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால் இந்த வீட்டுப்பாட முறையானது குறும்பு மற்றும் தவறுகள் செய்யும் மாணவர்களுக்கு மட்டும் ஒரு தண்டனையாக வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது இது பிள்ளைகளை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பள்ளி வரை பாடம் தொடரட்டும், பள்ளி முடிந்ததும் மகிழ்ச்சியாக பிள்ளைகள் விளையாடுவார்களேயானால் நிச்சயமாக அவர்களின் உடல் நலம் மேம்படும். எனவே அவர்களை சிறிது ஓடியாடி விளையாட அனுமதியுங்கள்.