notification 20
Misc
#archanai: தேங்காய், பழம், விபூதி, விளக்கு! அர்ச்சனை பொருள்களில் ஒளிந்துள்ள அர்த்தங்கள் - இதெல்லாம் தெரியாமல் கோவிலுக்கு போகவே கூடாது!

மன நிறைவு வேண்டி அடிக்கடி கோவிலுக்கு போவோம். அர்ச்சனை செய்ய தேங்காய், பழம் வாங்கிச்செல்வோம். சாமி கும்பிட்டு முடித்தால், விபூதி  வாங்கி நெற்றியில் வைப்போம். கோவிலை சுற்றியுள்ள தெய்வங்களுக்கு அகல்விளக்கு ஏற்றி வழிபடுவோம். இத்தனை செய்யும் நமக்கு, ஏன் இதெல்லாம் செய்கிறோம் என்ற யோசனை வந்திருக்கிறதா? நிச்சயம் வர வேண்டும். இந்தக்கால குழந்தைகள் எல்லாம், சர்வ சாதாரணம் கிடையாது. 25 வயதுக்கு நிகரான அறிவை, 15 வயதிலேயே பெற்றுவிடுகின்றனர். "ஏன் அப்பா இதெல்லாம் செய்கிறோம்?" என்று அவர்கள் கேட்கும் போது பேந்த பேந்த முழிக்க கூடாது அல்லவா? தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது தான்.

முதலில் தேங்காய் ஏன் உடைக்கிறோம் என்று பார்க்கலாம். கடினமான தேங்காயை உடைக்கும் போது, வெண்மை நிற பருப்பும், தித்திப்பான நீரும் சிதறும். அதே போல நம் வாழ்வில் கூடவே வரும் அகம்பாவம் என்னும் கடினமான ஓட்டை உடைக்கும் போது, வெண்மையான நம் மனமும், அதிலிருந்து தித்திப்பான எண்ணங்களும் சிதற வேண்டும் என்பதை உணர்த்த தேங்காய் உடைக்கப்படுகிறது.

அடுத்து நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்வோம். திருநீறு, விபூதி என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், ஒன்றின் சாம்பல் தான் விபூதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்வில் அகம்பாவம், பொறாமை, சுயநலம் எதுவும் இருக்க கூடாது, எல்லோரும் ஒரு நாள் சாம்பல் தானே ஆகப்போகிறோம் என்பதை உணர்த்துகிறது. இந்த எண்ணத்தை நமக்கு உணர்த்தவே உடலில் திருநீறு பூசிக்கொள்கிறோம். 

அர்ச்சனைக்கு வாழைப்பழம் வைப்போம். இதிலும் ஒரு சுவாரஸ்யம் நிறைந்திருக்கிறது. மற்ற எந்த பழத்தை மண்ணில் போட்டாலும், அது மீண்டும் செடியாகவோ, மரமாகவோ வளரும். ஆனால் வாழைப்பழம் அப்படியில்லை. வாழைப்பழத்தின் உள்ளே கருப்பு நிறத்தில் சின்ன சின்ன விதைகள் இருந்தாலும் அது முளைக்காது. இந்த பிறவியிலேயே முக்தி கிடைக்க வேண்டும். இன்னொரு பிறவி வேண்டாம் இறைவா என்பதை உணர்த்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் போது வாழைப்பழம் வைக்கிறோம்.

இறுதியாக அகல்விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று பார்க்கலாம். ஒரு அகல்விளக்கினால் இன்னொரு அகல்விளக்குக்கு ஒளியேற்ற முடியும். இருள் சூழ்ந்த இடத்தில் வைக்கப்படும் ஒரு அகல்விளக்கு அறை முழுவதுக்கும் வெளிச்சம் கொடுக்கும். அதுபோல நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதை உணர்த்த அகல்விளக்கு ஏற்றப்படுகிறது. இதுபோல பல வழிபாட்டு முறைகளுக்கு பின்னாலும், ஒரு காரணம் இருக்கும். அவற்றை இனி வரும் பதிவுகளில் காணலாம்.

 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts