தெலங்கானா மாநிலம், பூபாலபள்ளி மாவட்டம், புர்குகுடேம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் குரங்குகளின் தொல்லையில் இருந்து பயிரை காப்பாற்ற புதுமையாக யோசித்தார். வயலில் ஒரு நாய் புலி வேடமிட்டு காவலுக்கு விடப்பட்டுள்ளது. நாயின் உடம்பில் புலியின் கோடுகள் போல் கறுப்பு பெயின்ட் அடித்து வரையப்பட்டிருந்தது.
புலி வேடம் போட்டுள்ள நாயைக் கண்டு குரங்குகள் பயப்படுகின்றன. இதனால் அந்த பக்கம் குரங்கு கூட்டம் வருவதில்லை. இதனால் காட்டுப்பன்றிகள் கூட வர பயப்படுவதாக விவசாயி கூறினார். இரவு நேரங்களில் தூரத்தில் இருந்து பார்க்கும் மக்கள் கூட நாயை புலி என நம்பி பயந்துவிடுவதாக தெரிவித்தார்.
சுற்றி இவ்வளவு நடந்தும், புலி வேடத்திற்கு ஏற்ப நாய் நடக்கவில்லை. பார்க்க சாதுவாக நின்றது. ஊர் மக்களை விடவும் ஊடகங்கள் அடிக்கடி விவசாயி தோட்டதிற்கு சென்று புலி வேடம் போட்ட நாயை வீடியோ எடுத்துச் சென்றனர். புலி வேடம் போட்ட ஒரு சில நாட்களில் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.