Lushgreen

காதல் என்றால் வெறும் காமம் மட்டும் கிடையாதுங்க! காதலின் வித்தியாசமான குணங்களை வெளிப்படுத்தி அனைவரையும் திகைக்க வைத்த சூப்பர் இயக்குனர் விக்ரமனின் படைப்புகள்!

Nov 10 2021 02:48:00 PM

காதல் என்றால் ரூம் போடுவது என ஒரு சில திரைப்பட வசனங்களில் கேட்டிருப்போம். அந்த கன்றாவிக்கு வேற பெயர் இருக்கிறது. உண்மையான காதல் வெறும் உடல் சம்மந்தப்பட்டது கிடையாது. அடி மனதில் இருந்து வெளிப்படும் ஒரு உன்னதமான உணர்வு தான் காதல். ஒருத்தரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொள்வது எல்லாம் எப்போதோ மலையேறிப்போய் விட்டது. இப்போதெல்லாம் ஒரே நேரத்தில் பலரை காதலிப்பது தான் வழக்கமாக இருக்கிறது. இன்றைய இளசுகள் காதல் என்ற பெயரில் கண்டபடி ஊர் சுற்றிக்கொண்டு தறிகெட்டுப் போயிருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான காதல் என்றால் என்ன என்பதை தன்னுடைய பல படங்கள் மூலம் நிரூபித்தவர் தான் இயக்குனர் விக்ரமன். 90களில் பல சூப்பர்ஹிட் காதல் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் விக்ரமனின் ஒரு சில படைப்புகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

1. நான் பேச நினைப்பதெல்லாம்

director-vikraman special-movies

இந்தப்படத்தின் கதை போலியாக காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் சவுக்கடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. காதல் தோல்வியால் உயிரை விடுவதை விட நம்மை ஏமாற்றிய காதலர்கள் முன் நாம் வாழ்ந்து காட்டி ஜெயிக்க வேண்டும் என்ற அற்புதமான கதையை இந்தப்படத்தில் சொல்லியிருப்பார் விக்ரமன். இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சை கரைய வைக்கும் அளவுக்கு இனிமை நிறைந்ததாகும். அதிலும் குறிப்பாக ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

 

2. பூவே உனக்காக

director-vikraman special-movies

தளபதி விஜய் இளைய தளபதியாக இருந்த காலகட்டத்தில் வெளியானது இந்த திரைப்படம். தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் விஜய் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் விஜய்யின் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவிக்கொண்டிருந்த நேரத்தில் விக்ரமன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்து அவரது நடிப்பை தமிழ்நாடு முழுவதும் பேசவைத்தது. மனதில் ஒருவருக்கு மட்டும் இடம் கொடுப்பது தான் உண்மையான காதல் என்ற உன்னதமான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நம்மை நெகிழ வைத்தார் இயக்குனர் விக்ரமன்.

 

3. உன்னை நினைத்து

director-vikraman special-movies

சூர்யா கேரியரில் அவருக்கு திருப்புமுனையை ஏற்றிக்கொடுத்த படங்களில் உன்னை நினைத்து படமும் மிக முக்கியமானது. இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகவும் இனிமையாக நமது உள்ளங்களை வருடிச்செல்லும். காதலியால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், அந்த காதலிக்கு ஒரு கஷ்டம் என்றவுடன் எல்லாவற்றையும் தியாகம் செய்யும் அளவுக்கு இளகிய மனது கொண்ட காதலனாக சூர்யா நடித்திருப்பார். உன்னை நினைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒருவரும் நினைத்துப்பார்க்க முடியாத திருப்புமுனையை கொண்டிருந்தது. சூர்யா லைலாவின் கரம் பிடிப்பார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்து படத்தை பார்த்திருப்பீங்க. ஆனால் லைலாவின் தவறை சுட்டிக்காட்டி அவர் செய்த தவறை தானும் செய்ய மாட்டேன் என்று கூறி சினேகாவின் கைகளை பிடித்துக்கொண்டு சூர்யா நடந்து செல்வார். உண்மையான காதலன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்தப்படத்தின் மூலம் ஆணித்தரமாக சொல்லியிருப்பார் விக்ரமன்.

 

4. ப்ரியமான தோழி

director-vikraman special-movies

எல்லோருக்கும் தங்களுடைய பள்ளி அல்லது கல்லூரிப்பருவத்தில் கண்டிப்பாக ஒரு பெண் தோழி இருந்திருப்பாங்க. தங்களுடைய சகோதரி போல பாசம் காட்டும் தோழி எல்லா ஆண்கள் வாழ்க்கையிலும் இருப்பாங்க என்பதற்கு இந்தப்படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். காதலிக்கும், தோழிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவிக்கும், சிறு வயதில் இருந்து கூடவே இருக்கும் தோழிக்கும்  ஒவ்வொரு ஆணும் மனதில் ஒரு தனி இடத்தை ஒதுக்கியிருப்பான். ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினால் காதல் என்று மட்டும் நினைக்கக்கூடாது. காதலை தாண்டியும் உயர்வான உறவு தான் தோழன், தோழி உறவு என்பதை மிகவும் அற்புதமாக இந்தப்படத்தில் விக்ரமன் கூறியிருப்பார். தோழியின் வாழ்க்கைக்காக தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்யத்துணியும் ஒரு ஆண் நண்பனின் உண்மையான நட்பு, பாசம் ஆகியவற்றை வெளிக்கொண்டுவந்த இந்த திரைப்படம் மகத்தான வெற்றியை பெற்றது.

 

5. சூரியவம்சம்

director-vikraman special-movies

சூரிய வம்சம் திரைப்படத்தை பற்றி தெரியாதவங்க தமிழ்நாட்டில் இருக்க மாட்டாங்க. சரத்குமாரின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது சூர்ய வம்சம் திரைப்படம். இரட்டை வேடத்தில் அவர் இதில் நடித்திருப்பார். தந்தை மகன் பாசம், காதல் தோல்வி, வாழ்க்கையில் படிப்படியாக எப்படி முன்னேறுவது, உறவுகளின் முக்கியத்துவம், படிப்பறிவு இல்லை என்பதற்காக ஒருவரை குறைத்து மதிப்பிடக்கூடாது, கணவன் மனைவி இருவரின் ஒற்றுமையான வாழ்க்கை முறை என ஏகப்பட்ட கருத்துக்களை இந்தப்படத்தின் மூலம் விக்ரமன் வெளிப்படுத்தியிருப்பார். தன்னுடைய ஸ்டைலில் காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு நச்சென்று ஒரு கருத்தையும் சொல்லியிருப்பார்.

 

6. உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்

director-vikraman special-movies

நவரச நாயகன் கார்த்திக்கின் 100வது திரைப்படம் தான் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். இந்தப்படத்தில் கார்த்திக் மற்றும் ரமேஷ் கண்ணா இருவரின் காமெடியும் சூப்பராக இருக்கும். மீண்டும் ஒருமுறை உண்மையான காதலின் ஆழத்தை இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமன் கூறியிருந்தார்.

 

7. புது வசந்தம்

director-vikraman special-movies

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் தான் புது வசந்தம். முதல் படத்திலேயே முத்திரை பதித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார் விக்ரமன். முதல் படத்திலேயே காதல் மற்றும் நட்பு இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மற்றும் நட்பின் புனிதம் ஆகியவற்றை தெளிவாக கூறி ஒரு புதுமையான படமாக புது வசந்தம் படத்தை கொடுத்தார் இயக்குனர் விக்ரமன். முரளி, ஆனந்த் பாபு, சார்லி, ராஜா, சித்தாரா ஆகிய ஐந்து பேருடைய நடிப்பும் அவர்களுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுத்து அவர்களுடைய திரை வாழ்க்கையை புரட்டிப்போட்டது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற விருதை வாங்கியவர் தான் இயக்குனர் விக்ரமன். இவருடைய படைப்புகளில் என்னைக்கவர்ந்த திரைப்படங்கள் சிலவற்றை இங்கே கூறியுள்ளேன். இதில் நான் தவறவிட்ட திரைப்படங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த விக்ரமனின் திரைப்படங்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.