Daily News

வேற லெவல் சம்பவம் பண்ணி வசமாக மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவன்! தியேட்டர் வாசலில் அரங்கேறிய போலீஸ் ஸ்டோரி!

Sep 23 2022 10:19:00 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் இருக்கும் தியேட்டரில் நடந்த சம்பவம் ஒரு பக்கம் சிரிப்பை வரவழைத்தாலும் இன்னொரு பக்கம் இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டும் விதத்தில் இருக்கிறது. அந்த தியேட்டருக்கு திடீரென்று போலீஸ் ஒருவர் விசிட் அடித்துள்ளார். ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிவதாக சொல்லிய அவர் தியேட்டர் மேலாளரிடம் சரமாரியான கேள்விகளை கேட்டு அவரை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் தியேட்டருக்கு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வருவதாக புகார் வந்துள்ளது. பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு டிக்கெட் கொடுப்பது தொடர்பாக உங்க தியேட்டரில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. தியேட்டரில் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர்? பள்ளி மாணவர்கள் யாராவது இங்கு வேலை செய்கின்றனரா? என அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் அந்த போலீஸ்.

இவரை பார்த்தா ஒரிஜினல் போலீஸ் மாதிரி தெரியலையே என்று மனத்துக்குள் யோசித்த தியேட்டர் மேலாளர் சைசாக அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு போன் போட்டுள்ளார். தியேட்டருக்கு போலீசார் வந்த பிறகு தான் ஏற்கனவே அங்கிருந்தவர் டூப்ளிகேட் போலீஸ் என்பது நிரூபமானது. அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை விசாரித்தபோது அவர் அந்தப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் என்பது தெரிய வந்தது. 22 வயதாகும் அந்த மாணவன் ஏன் போலீஸ் வேடம் போட்டு வந்து தியேட்டரில் இருப்பவர்களை மிரட்டினான் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.