சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக இருப்பது கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். சென்னையை போல இங்கும் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதனால் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த திட்டத்துக்கான அறிக்கை இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாமல் இருப்பதால் கோவைக்கு மெட்ரோ ரயில் வருவது தாமதமாகிக்கொண்டே போகிறது.

மெட்ரோ திட்டத்துக்காக மேம்பாலங்களை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே நிதியை ஒதுக்கிவிட்டது. இருப்பினும் பணிகள் எதுவும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. மெட்ரோ திட்டத்துக்கான அறிக்கை இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. அதனால் அந்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். இதற்கு பதில் கொடுத்துள்ள மத்திய அரசு, மெட்ரோ பணிகளை துவங்கவில்லை என்றால் கொடுத்த நிதியை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளது.

பல்வேறு சிக்கல்கள் காரணமாக மெட்ரோ திட்டப்பணிகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. மெட்ரோ திட்டதுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்பதால் அதிகாரிகளும் குழம்பிப்போயுள்ளனர். சிக்கல்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ பணிகள் துவங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது. ஆனால் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.