பொது இடங்களில் Prank என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கேலி வீடியோ எடுத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. சமீப காலமாக சிலர் Prank செய்வதாக கூறி பொது இடங்களில் அசௌகரியமான சூழ்நிலைகளை உருவாக்கி, தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கையை பாதித்து வருவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில், Prank வீடியோவில் தோன்றியவர்களின் சம்மதத்தைப் பெறாமல் வீடியோவை வெளியிடுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என்றும் கோவை போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.