கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவருக்கு மொத்தம் எத்தனை பந்துகள் என்று கேட்டால் 6 பந்துகள் என்று பச்ச புள்ளை கூட பளிச்சென்று பதில் சொல்லும். ஆனால் இவரைப் பொறுத்தவரையில் ஒரு ஓவருக்கு 22 பந்துகள். என்னது 22 பந்துகளா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்பது இவருக்கும் தெரியும். இவரோட நேரமோ என்னமோ தெரியல பயபுள்ள கிட்டத்தட்ட 4 ஓவரை ஒரே ஓவராக வீசி உலக சாதனை படைத்துவிட்டார்.
சாதனை என்றாலே கண்டிப்பாக அது இதுவரை யாரும் செய்திராத ஒரு சம்பவம் தானே. அப்புறம் என்ன நல்ல சாதனை மோசமான சாதனை என்று பிரிச்சு வச்சிக்கிட்டு இருக்கீங்க. ஒரு மனுஷன் ஒரு ஓவருல 22 பந்து வீசி 77 ரன்களை கொடுப்பது என்ன சாதாரண காரியமா? பிரெட் லீ, அக்ரம், முரளிதரன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் கூட இப்படி ஒரு சாதனையை படைக்கவில்லை.
இந்த வினோதமான சாதனைக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெர்ட் வேன்ஸ் தான். அவர் ஒரு முதல் தர உள்ளூர் போட்டியில் தான் இந்த மகத்தான சாதனையை அரங்கேற்றினார். இந்த சாதனை நம்மில் பலருக்கும் தெரியாது. அதற்கு காரணம் அப்போது நம்மில் பலரும் பிறந்திருக்க மாட்டோம்.
ஆமாங்க அவர் 1990ம் ஆண்டு தான் இந்தச்சாதனையை நிகழ்த்தினார். அது எப்படி ஒரு ஓவரில் 22 பந்துகளை வீச முடியும் என்று குழப்பமாக இருக்கிறதா? நோ பால், வைடு என்று ஏகப்பட்ட வழி இருக்குதே. இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லி கொடுக்கணுமா? பெர்ட் வேன்ஸ் மேல் எதிரணிக்கு என்ன கோவமோ தெரியவில்லை. அவருடைய பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கவிட்டு 22 பந்துகளில் 77 ரன்களை குவித்துவிட்டனர்.
கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். இங்கு ஒரு ஓவரில் இரண்டு சாதனையை படைத்துள்ளார் நம்ம அண்ணாச்சி. ஒரே ஓவரில் 22 பந்துகளை வீசியது ஒரு உலக சாதனை. ஒரே ஓவரில் 77 ரன்களை அள்ளிக்கொடுத்தது இன்னொரு சாதனை. இந்த இரண்டு சாதனைகளும் இதுவரை சர்வதேச போட்டிகளில் கூட முறியடிக்கப்படவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.