அறிவே இல்லாமல், ஐந்தே மாதத்தில் குழந்தைக்கு தாய் பால் மறக்கடிக்கணும்னு சொல்றாங்க. இவங்களை எல்லாம் பார்த்தாவே கடுப்பாகுது. ஏன்னு கேட்டா, பொண்ணுக்கு அழகு போயிருமாம். அவளுடைய சத்தை எல்லாம் குழந்தை உறிஞ்சிவிடுமாம். அவங்க சொல்ற காரணத்த பாருங்க. ஒன்னு ஆச்சும் உருப்படியா இருக்கா? குழந்தைக்கான உணவை மறக்கடித்து தான், அழகை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று கூட ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஒருத்தாங்க சொன்னா, அதன் பின்னாடியே போவது.
இதாங்க நம்ம ஊரில் காலம் காலமா நடந்துக்கிட்டு இருக்கு. குழந்தைகளுக்கு ஒரு வயதிலேயே நாம் சாப்பிடும் அனைத்தும் சாப்பிட பழக்க வேண்டும். அதற்காக தாய் பாலை நிறுத்தணும் என்ற அவசியம் கிடையாது. தாய் பால் குழந்தை பெரியதாக வளரும் போது திக்காக மாறிகுழந்தையின் வயிறை நிரப்பிவிடும். அந்தக்காலத்தில் ஐந்து வயது வரைக்கெல்லாம் கூட, தாய் பால் கொடுத்திருக்காங்க. இன்னைக்கு ஐந்து மாதத்திற்கே யோசிக்கிறாங்க. இப்பவும் அந்தக்காலம் மாதிரி கொடுக்காங்கன்னு சொல்லல, அட்லீஸ்ட் இரண்டு வருடமாவது கொடுத்தால் தான், குழந்தைக்கு எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைப்பாடு வராதுன்னு சொல்றாங்க.
இதுவும் கார்ப்பரேட் முதலாளிகளின் நரி தந்திரமாகவே என் கண்களுக்கு தெரிகிறது. அப்பொழுதுதானே அவர்களின் ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் பவுடர்களை கூவிக்கூவி விற்க முடியும். இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவு சந்தையின் மதிப்பு, பல ஆயிரம் கோடிகளை தாண்டும். எல்லோரும் தாய் பால் குடித்து, ஊட்டச்சத்து கிடைத்துவிட்டால், அவங்க பிழைப்புக்கு என்ன பண்ணுவாங்க?. அதன் பொருட்டு பரவ விடப்பட்ட வதந்தி தான், தாய்பால் கொடுப்பதால், தாயின் உடல் பலவீனமாகிவிடும்; அவள் அழகு போய்விடும் என்பதெல்லாம்.
அதனை மீறி கொடுத்தால், குழந்தைக்கு பால் குடியை மறக்க வைக்க முடியாது என்பதை, தாய்மார்கள் மனதில் நன்கு பதிய வைத்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்கின்றது என்றால், அது ஒரு குழந்தைக்கு சேரவேண்டிய உணவாகும். அப்படிப்பட்ட உணவை வீணடிப்பதும், தர மறுப்பதும் மிகப் பெரும் குற்றமாகும். முடிந்த அளவு தாய்ப்பால் சுரக்க எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என ஆய்ந்து அதனை எடுத்துக் கொள்வது நல்லது. அம்மாவுக்கு ஆரோக்கிய குறைவு இல்லை, பால் நன்றாக சுரக்கிறது என்றால் தயவு செய்து 2 வயது வரை தாய்ப்பாலையே கொடுங்கள். அதுவே நல்லது. இதில் மாற்றுக்கருத்து ஏதாவது உங்களிடம் உள்ளதா?