உலகில் மிகவும் உயரமான நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டிலுள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான். 979 மீட்டர் உயரத்தில் இருந்து எந்தவித தங்குதடையுமின்றி ஆர்ப்பரித்து கொட்டுகிறது இந்த நீர்வீழ்ச்சி. பொலிவார் மாகாணத்தில் உள்ள அவ்யான் தேபுய் என்ற மலையின் உச்சியில் இருந்து 3230 அடி உயரத்தில் இருந்து கீழ் நோக்கி பாய்கிறது.
ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் ஒரு துளி நீர் தரையை தொடுவதற்கு 14 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது என்பது நமக்கு உண்மையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அந்தப்பகுதியில் வீசும் காற்றினால் மேலே இருந்து விழும் நீரின் பெரும்பகுதி பனித்துளி போல ஆவியாகி பறந்து விடுகிறது. எஞ்சிய நீரே கீழே ஓடும் கெரெப் என்னும் ஆற்றில் விழுந்து பாய்ந்தோடுகிறது. 1933ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி ஏஞ்சல் என்ற விமானி ஒருவர் தங்கத்தைத்தேடி மலைகளின் மீது பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் இந்த இயற்கை அதிசயத்தை கண்டுபிடித்து வெளியுலகிற்கு தெரிவித்தார்.
இதனால் இந்த நீர்வீழ்ச்சி அவரின் பெயரால் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ஐ.நா.வின் யுனெஸ்கோ இந்த இடத்தை உலகின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சி நிச்சயம் இயற்கையின் அற்புதமான பொக்கிஷமாகும். இந்த இடத்திற்கு வாய்ப்பிருந்தால் நேரில் சென்று பாருங்கள். உங்களை மெய்மறக்க செய்து விடும் இந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.