முந்தைய எபிசோடுகளை பார்க்க
மதியழகன் பொறுமை இழந்து விட்டான். எழுந்தான். அறைக்குள் நடை பயின்றான். காலையில் அவனுக்கும், அவளுக்கும் வந்த பரிசுப் பொருட்களை ஓர் ஓரமாக அடுக்கி வைத்து இருந்தார்கள். சில பரிசுப் பொருட்கள். கன்னி கழியாத பெண் போல, பரிசுத் தாளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. உள்ளே இருப்பது பிரித்துப் பார்க்கப்படவில்லை. மணமக்கள், பிரிக்கட்டுமே என்று அப்படியே வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.
அருகில் சென்று இரண்டைப் பிரித்துப் பார்த்தான். அதற்கு மேல் பொறுமை இல்லை. வைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தான். அவன் தலைக்கு மேல் பூச்சரம் தொங்கியது. ஒரு மல்லிகை மொட்டு இன்னும் மலராமல் இருந்தது. சரத்தில் இருந்து அதை உதிர்த்து எடுத்தான். அல்லியை நினைத்துக்கொண்டே அதன் இதழ்களைக் கையினால் விரித்தான். 'குப்' என்று மணந்தது. கையை உயர்த்தி முகர்ந்தான். அப்பொழுது கதவு திறந்தது.
சொர்க்க வாசல் திறந்தது போல இருந்தது! மதியழகன் சட் என்று திரும்பிப் பார்த்தான். நாலைந்து தோழிகள் அல்லியை அறைக்குள் தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.
"தாழ் போட்டுக் கொள்ளடீ!"
''கலீர்', 'கலீர்" என்று சிரிப்புகள்.
“குபீர்”ச் சிரிப்பு வீட்டையே குலுங்க வைத்தது.
அல்லி படார் என்று கதவைச் சாத்திக் கொண்டு தாழிட்டாள். தோழிகள் கதவை இடித்துத் திறந்து விடுவார்கள் என்று அஞ்சியது போலக் கதவில் சாய்ந்து கொண்டு நின்றாள்.பூச்சுமை தாங்காமலோ என்னவோ, அவள் தலை குனிந்து இருந்தது. மதியழகன் அவளைப் பார்த்தான். அவள் யார்? அல்லிதானா? அல்லது வேறு பெண்ணை அனுப்பியிருக்கிறார்களா? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு முகம் இருந்தது.
மெல்ல அவளை நோக்கி நகர்ந்தான். அருகில் சென்று அவள் கையைப் பற்றினான் "அல்லி!" பனி மழை நனைந்தது போல, அவள் மெய்சிலிர்த்தாள். அரவணைத்து அணைத்தபடி அவளைக் கட்டிலுக்கு அழைத்து வந்தான்.பாலைப் பக்கத்தில் வைத்து விட்டு, அவன் காலில் விழுந்தாள் அவள்.அவன் அவளை அள்ளியெடுத்துக் கட்டிலில் அமர்த்தி னான். தானும் அவளை ஒட்டியபடி உட்கார்ந்து கொண்டான். அவள் பாலை எடுத்து நீட்டினாள். அவன் வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவளை உற்றுப் பார்த்தான். அவள் நாணத்துடன் தலை குனிந்தாள்.
அடுத்து நடக்கப்போவதை நாளை பார்க்கலாம்