அந்த அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்து கொண்டு இருந்தது. பட்டு இதழாக மொட்டு விரிந்த முல்லையும் மல்லிகையும் கமகமத்தன. சந்தன ஊதுபத்தி சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தது. ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மணம் வீசின. ஒரு தட்டில் லட்டு, அல்வா, ஜாங்கிரி என்று அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட அவையும் சுத்தமான மணத்தை வீசின.
பூத் தூவிய மஞ்சத்தில் புத்தாடையுடன் அமர்ந்து இருந்த மதியழகன், சென்ட் போட்டு இருந்தான். மற்ற மணத்துடன் அதுவும் போட்டியிட்டது. ஊதுபத்தியின் புகை சுருள் சுருளாகக் காற்றில் மிதந்து கொண்டு இருந்தது. தான் மட்டும் அல்ல; நேரமும் கரைந்து கொண்டு இருப்பதை அது உணர்த்தியது. என்ன பெரியவர்கள்! ஒரு புது மாப்பிள்ளை எவ்வளவு நேரந்தான் காத்து இருப்பான்!
இவர்களுக்கு எல்லாம் முதல் இரவு என்று ஒன்று நடந்ததே இல்லையா? வேறு யாராவதாக இருந்தால், இந்நேரம் தலையணையை இரண்டில் ஒன்று பார்த்து இருப்பார்கள்! மதியழகன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். அதுவும் புதிதுதான். மாமனார் வாங்கிக் கொடுத்தது. மனைவி-கைக்கடிகாரம் - பேனா. மூன்றும் ஒரு கைப்பட இருக்க வேண்டும் என்பார்கள். எனவே, அவனுக்குப் புது மனைவியுடன், புதுக் கைக் கடிகாரமும் மாமனார் அளித்தார் போலிருக்கிறது!
மனைவியைத் தங்கத்தில் வார்த்துத் தந்தார். கைக்கடிகாரமும் அப்படியே பொன்னிற மெருகூட்டப்பட்ட தங்கச் சங்கிலி மின்னிப் பளபளத்தது. மணி பத்தைத் தாண்டிவிட்டது. இரவுச் சாப்பாடு முடிந்ததும், நண்பர்களைக் கூட அடித்து விரட்டிவிட்டு, அவன் பள்ளி அறைக்குள் வந்தான். ஆனால் அல்லி இன்னும் வந்தபாடாக இல்லை. அலங்காரம் நடந்து கொண்டு இருக்கிறதோ?
அல்லிக்கு என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கிறது? அல்வாவுக்கு யாராவது சர்க்கரை போட்டுக் கொள்வார்களா? அவளே பட்டை தீட்டப்பட்ட வைரம் ஆயிற்றே! இப்படி முதல் இரவு வர்ணிப்புடன் தொடங்குகிறது அமுதா கணேசனின் "அல்லி" கதை. அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களை படித்தவுடன் பகிர்கிறேன்.