குழந்தை பாக்கியம் வேண்டி சஷ்டி விரதம் இருந்து வருகிறேன். இதற்கு முன்னர் விரதம் இருந்து பழக்கமில்லை. எப்படி முறையாக இருக்க வேண்டுமென்று யாரும் சொல்லிக்கொடுக்காத காரணத்தினால், ஆரம்பத்தில் சில தவறுகளை செய்துவிட்டேன். ஒரு நாள் முழுக்க விரதம் இருந்து, மாலை கோவிலுக்கு சென்று வந்த உடனே விரதத்தை முடிக்க வேண்டும் என்பது என்னுடைய கணக்கு. முதன்முதலாக சஷ்டியன்று காலை முதல் மாலை வரை விரதம் இருந்து, மாலை 5 மணிக்கு கோவிலுக்கு சென்றேன்.
வீட்டுக்கு திரும்பி வர 7 மணியாகிவிட்டது. வந்ததும் ஒரு 7.30 வாக்கில் கொள்ளை பசி. அப்போதே வயிறு முட்ட சாப்பிட்டேன். எல்லாம் நல்லா தான் போச்சு. இரவு 12 மணி ஆனதும் கடுமையான வயிற்றுவலி. பொறுக்க முடியவில்லை. அல்சர் மாத்திரை எல்லாம் தேடி அலைந்தேன். இரண்டு மணி வரைக்கும் தூக்கமே இல்லை. பிறகு மெதுவாக வலி குறைந்து. அதற்கு பிறகே தூங்கினேன். அடுத்தநாள் காலையில் அம்மாக்கு கால் பண்ணி கேட்டபோது, விரதம் முடித்த உடனே வயிறு முட்ட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாங்க.
முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும். மபிறகு ஜூஸ் குடிக்கணுமாம். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து எளிதாக ஜீரணம் ஆகும் படி கஞ்சி அல்லது வேறு ஏதாவது ஆகாரம் சாப்பிடலாம். உடல் அவற்றை ஏற்றவுடன் பழங்கள் அல்லது இலேசான உணவு அளவாக உட்கொள்ள வேண்டும். விரதம் முடித்த உடனேயே வயிறு முட்ட உண்ணக்கூடாது. அம்மாவெல்லாம் பசும்பால் அல்லது பூம்பழம் சாப்பிடுவாங்களாம். கொஞ்சம் பெரியவங்க பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்பதை, இந்த சம்பவத்திற்கு பிறகு உணர்ந்துகொண்டேன்.