தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகராக மாறுவதோ, நடிகர்கள் இயக்குனராக மாறுவதோ புதிய சம்பவம் கிடையாது. இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட நடிகராக களமிறங்க தொடங்கி விட்டனர். திரையில் அற்புதமான நாயகனாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இயக்குனர் ஆசை வருவதை தவிர்க்க முடியவில்லை. இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள லேட்டஸ்ட் நடிகர்கள் சிலரை இன்றைய பதிவில் பார்ப்போம்.
சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் மாதவன் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை இயக்கி அதில் தானே நாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் வெற்றி அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டுமென்ற ஆவலை தூண்டியது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இருப்பினும் படம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இயக்குனர் மிஷ்கினுக்கும் நாயகன் விஷாலுக்கும் மோதல் ஏற்படவே மிஸ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து வெளியேறினார். துப்பறிவாளன் 2 படத்தை விட மனமில்லாத விஷால் படத்தை தானே இயக்குவதாக அறிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு தனிஒருவன் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நெட்பிலிக்சில் வெளியாகியுள்ள “நவரசா” தொடரில் ஒரு பகுதியை இயக்கியுள்ளதன் மூலம் அரவிந்த்சாமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக மாறிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார். நடிகர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதல்ல. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு ஏற்கனவே படங்களை இயக்கியுள்ளனர். நடிகர்கள் இயக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை. நடிகர் அல்லது இயக்குனர் யார் படத்தை இயக்கினாலும் படம் வலுவான கதை இருந்தால் மட்டுமே வெற்றியடையும்.