கோவையில் இருந்து ஒகேனக்கல் செல்லவேண்டுமென்றால் மேட்டூர், மேச்சேரி, பென்னாகரம் வழியாக தான் போகணும்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒகேனக்கல் செல்ல இன்னொரு வழி இருப்பது சிலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையான பாலாறு சோதனைச்சாவடியை கடந்து 500 மீட்டர் தொலைவில் மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு பேருந்து நிறுத்தம் வரும்.
நேராக சென்றால் மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பாதை,, வலது பக்கம் (Right Side) திரும்பி நேராக சென்றால் ஒகேனக்கல் செல்லும் வழி. வலது பக்கத்தில் இருந்து திரும்பி நேராக 30 கிலோமீட்டர் ஒகேனக்கலுக்கு செல்லும் இந்த பாதை மிக அடர்ந்த காட்டு பகுதியாகவும், காவேரி ஆறுகள் கரைபுரண்டு ஓடும் அழகையும் ரசித்து கொண்டே செல்லலாம். இந்த வழி பாதையில் காட்டு விலங்குகளான யானை, கீரி, உடும்பு, மான்கள் உள்ளன.
30 கிலோமீட்டர் கடந்து ஒகேனக்கல் சென்றடைந்தால் அங்கிருந்து பரிசலில் பயணம் செய்து, தமிழக எல்லைக்குள் வரும் ஒகேனக்கல் பகுதிக்கு செல்லலாம். பரிசலில் செல்ல 4 பேருக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிருது. இதில் போக வர, 30 நிமிடம் சுற்றி பார்த்து விட்டு வர என்று அனைத்தும் உள்ளடங்கும். இந்த பரிசல் பயணத்தில் காவேரி ஆற்றின் அழகையும், ஆங்காங்கே சிறிய நீர் வீழ்ச்சிகளையும் கண்டுகளித்து கொண்டே செல்லலாம். இந்த பரிசல் காவேரி ஆற்று பயணம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.
ஈரோடு, பவானியில் இருந்து சென்றால் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தபாடி வழியாக செல்லலாம். இல்லையென்றால் சிங்கம்பேட்டையில் இருந்து பூதபாடி, குருவாரெட்டியூர், கண்ணாமூச்சி வழியாக சென்று கொளத்தூர் நால்ரோட்டை சென்றடையாலாம். இந்த வழியில் இயர்கையின் அழகை ரசித்து கொண்டே செல்லலாம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் நல்ல சாலைகளாக இருக்கும். மிக பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்து செல்ல வேண்டாம் இது சிறிய ஊர் தான். என்னதா இருந்தாலும் நம்ம ஊரு ஒகேனக்கல் மாதிரி வராது. இந்த காட்டு வழி பயணமும், பரிசல் பயணமும் எனக்கு பிடித்து இருந்தது என்று கூறுகிறார் பயண ஆர்வலர் சுபான். | Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க? ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா? இனி போவீங்க!