ராக் ஸ்டார் ரமணியம்மாள்!!!
  • 23:16PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 23:16PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ச.ரி.க.ம.ப. நிகழ்ச்சியில் தற்போது கலக்கி வரும் ரமணியம்மாள்தான் தற்போது தமிழக மக்களின் ஹாட் டாக். 80 வயதைத் தாண்டிய ரமணியம்மாள் தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு மேல் கோல்டன் பெர்பார்மென்ஸ் அவார்ட் வேறு வாங்கிக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் வேலை வீட்டு வேலை.  வீட்டு வேலை செய்து விட்டு மிச்சமிருக்கும் நேரத்தில் தன் பேத்தியிடம் சொல்லி அவள் டவுன்லோட் செய்து கொடுக்கும் பாடலை இரண்டு மன்று முறை கேட்டு, அந்த நினைவினாலேயே சுதி சுத்தமாகப் பாடி, கூடப் பாடி வரும் இளசுகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் இந்த 80 வயது பாட்டி.  அதிலும் ஹை பிட்சில் பாடல்கள் பிசிறு தட்டாமல் வருவதுதான் பிரமாதம்…

ஆரம்பத்தில் ரமணி பாட்டி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த ரமணியம்மாளுக்கு இணையத்தில் கிடைத்த வரவேற்பு அவருக்கு ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்ற பட்டத்தை வேறு பெற்றுத் தந்திருக்கிறது. பெரிய நடிகர்களின் ட்ரெய்லர் முதல் நாள் 3 லட்சம் பார்வை, இரண்டாம் நாள் 5 லட்சம் என்றெல்லாம் இரசிகர்கள் கணக்கு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் ரமணியம்மாள் பாடலுக்கு முதல் நாள் கிடைத்த பார்வைகள் நிஜமாகவே பிரமிப்பூட்டுகிறது.  எவ்வளவு தெரியுமா??? 30 லட்சம்.  தற்போது வரை அவரது பாடலுக்கு கிடைக்கும் பார்வைகள் இன்னமும் அதிகம்.  அது 55 லட்சத்து 46 ஆயிரத்து சொச்சம் பார்வைகள்.  சின்னத்திரை வரலாற்றிலேயே இத்தனை பெரிய வரவேற்பைப் பெற்றது யாரென்று பார்த்தால் அது ராக் ஸ்டார் ரமணியம்மாளுக்கு மட்டும்தான் என்றால் மிகையில்லை. 

சின்னத் திரையில் ஜீனியர் சூப்பர் ஸ்டார் அஸ்வந்த், தற்போது விஜய் தொலைக்காட்சி வழங்கும் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடிய திருநங்கை போன்றோருக்கும் பெரிய செல்வாக்கு இருந்த போதும் அது பத்து லட்சம் என்ற அளவிலேயே இருக்க, ராக் ஸ்டார் ரமணியம்மாள்தான் முதன் முதலாக அரைக் கோடி மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.  இந்தக் கணக்கு பிரபல நட்சத்திரங்கள் சம்பந்தப்படாமல் வந்த சின்னத் திரை வெற்றி என்று கூடச் சொல்லலாம்.  சரி, போட்டிக்குப் பிறகு ராக் ஸ்டார் ரமணியம்மாள் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அவர் இன்னமும் தான் வழக்கமாக வேலை செய்யும் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார் எதுவும் நடக்காதது போல.  சுற்றியுள்ள மற்றவர்களுக்கு அவர் பெரிய நட்சத்திரம் என்றாலும், அதைப் பற்றி துளி கூட சட்டை செய்யாதவராகத்தான் உலவிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஏற்கெனவே ஜீ தொலைக்காட்சிக்கும், கொகுப்பாளர் அர்ச்சனாவுக்கும் ரமணியம்மாளின் மேனேஜர் நம்பர் கேட்டு, ப்ரோகிராமுக்காக வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.  பாஸ்போர்ட் என்றால் போட்டோதானுங்க என்று கேட்கும் அந்த வெள்ளந்தி உள்ளத்திற்காக அர்ச்சனா, தன் சார்பாகவும், ஜீ தமிழ் சார்பாகவும் 15 தினங்களுக்குள் ரமணியம்மாளுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாகச் சென்ற வாரம் வாக்களித்து அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.  அப்படி நடந்தால், உண்மையான ராக் ஸ்டார் போல ரமணியம்மாளும் விரைவில் கான்சர்ட் டூர் (Concert Tour) அடிக்க ஆரம்பித்து விடுவார்.  வெளிநாட்டில் பாடகர்களுக்கு புகழின் உச்சியில் கிடைக்கும் பெரிய விஷயமாகக் கருதுவதே இந்த கான்செர்ட் டூர் ஒன்றுதான். 

உலகில் அதிகம் வருமானம் கொழிக்கும் விஷயங்கள் எனப் பலவற்றைச் சொன்னாலும், உண்மையில் அன்பு, திறமை இவைதான் பெரிய வருமானம் கொடுக்கும் விஷயங்களாக இருக்கிறது.  எப்படி என்று கேட்கிறீர்களா??? அந்த அன்புதான் வசதி, வயது எதையும் பார்க்காமல் ரமணியம்மாளை ரசிக்கச் சொல்லியது.  ரமணியம்மாளின் திறமை அவரது வாழ்க்கையை மந்திர தந்திரக் கதைகளில் வருவது போல, ஒரே மாதத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது.  எது எப்படியோ, ராக் ஸ்டார் ரமணியம்மாளின் வயது கடந்த சாகசம் பல்வேறு தரப்பினருக்கும் தங்களுக்கும் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறதென்றால் அது மிகையாகாது…    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top