மகப்பேற்றுக்கு பிறகு வெலைக்குச் செல்ல விரும்பும் பெண்ணா நீங்கள்???
  • 09:39AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:39AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

பெண்களைப் பொறுத்தவரையில் மகப்பேறு என்பது ஒரு மிகப்பெரிய தவமாகக் கருதப்படுகிறது.  ஒருவகையில் பெண்களின் வாழ்க்கை மகப்பேற்றுக்கு முன், மகப்பேற்றுக்குப் பின் என இருவகை என்றும் சொல்ல முடியும்.  திருமணமாகித் தாய்மையடையும் வரை வேலைக்குச் செல்ல முடிவெடுக்கும் பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள் எவை என்று சற்று கவனிப்போமா???

  1. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் அவுட்டேட் ஆகியிருக்கக் கூடும். புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய புரிதல் இல்லாமை ஒரு பலவீனமாக மாறிவிடக்கூடும்.
  2. பொதுவான வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கு Touch விட்டுப் போச்சு எனப் புலம்பும் அளவிற்கு இடைவெளி ஏற்பட்டிருக்கும்.
  3. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வீட்டில் செல்லமாக இருந்தபின், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குள்ளாக (கிராமத்துப் பக்கத்தில் பச்சை உடம்புக்காரி என்று சொல்வார்கள்!!!) வேலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டால் அங்கு நடக்கும் விஷயங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு மனதிலோ, உடலிலோ வலிமை இல்லாமல் இருத்தல்.
  4. குழந்தையை விட்டுச் செல்லும்போது, கவனம் வேலையில் சரியாக இல்லாமல் தடுமாறுதல்.

இதற்கு மேற்கொண்டு செல்லும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், எதற்காக வேலைக்குச் செல்ல விருப்பப்படுகிறார்கள் என்பதே. அதற்குப் பொதுவாக இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கக் கூடும்.   

  1. பணம் சம்பாதித்தல்,
  2. வீட்டில் சும்மா இருக்க முடியாமல் அல்லது சம்பாதிப்பது தன் தனித்தன்மையைக் காப்பாற்ற உதவும் என்று…

முதல் வகைக்கு வேறு வழியில்லை.  குழந்தையை வளர்ப்பது துவங்கி அனைத்திற்கும் சென்றாக வேண்டிய கட்டாயம். பல நிறுவனங்கள் இதனைப் புரிந்து கொண்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்குச் சென்று விட்டால், கசக்கிப் பிழிவது என்ற கோட்பாடுடையவர்கள். அதாவது, 10,000 ரூபாய் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 25,000 அளவிற்கு வேலை வாங்கினால்தான் திருப்தியடைவார்கள்.

உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் குறைந்தபட்சம் ஓராண்டாவது குழந்தையுடன் செலவழியுங்கள். உங்கள் குழந்தை பால்குடி மாறும் பருவம் அது. இதற்குள் முடிந்த வரையில் வீட்டு வேலைகளில் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் தொழில்நுட்பத் துறையில் வேலையில் இருந்தவர்களாக இருந்தால். உங்களை அப்டேட் செய்து கொள்ள அந்த நேரத்தினை உபயோகப்படுத்துங்கள்.

வேலைக்குச் செல்லும் முன் எழ வேண்டிய நேரத்திற்கும் தயாராகிக் கொள்ளுங்கள்.  வேலைக்குச் செல்லும்முன் குழந்தைப் பராமரிப்பு பற்றி, உங்கள் கணவருக்கும் சொல்லிக் கொடுங்கள். திடீரென்று குழந்தையைக் கையில் கொடுத்து 10 நிமிஷம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் புரிந்து கொள்ளும் பக்குவமோ, பார்த்துக் கொள்ளும் பக்குவமோ பெரும்பாலான ஆண்களுக்கு கிடையாது.

ஒருவேளை நீங்கள் இரண்டாவது இரகமாக இருந்தால். சிறிய அளவில் வீட்டிலிருந்தவாறே அல்லது வீட்டைச் சுற்றி சிறியதாக ஏதாவது தொழில் தொடங்க முடியுமா என்று பாருங்கள்.  இந்தக் காலகட்டத்தில், இவ்வாறு சிறியதாக தொழில் துவங்கிய நிறையப் பெண்கள் அதிகரித்த பொறுப்புணர்ச்சியின் காரணமாக சாதனைப் பெண்களாக வலம் வருகிறார்கள்.

அந்த அளவிற்கு பணம் இல்லையென்றால் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய விஷயங்களைச் சரிபார்த்து, உங்களுக்கு எது சரியாக வருமென்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.  சம்பாதித்த மாதிரியும் இருகுகும், குழந்தையையும் கவனித்த மாதிரி இருக்கும், வீட்டில் சும்மா இருந்த மாதிரியும் இருக்காது.  கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அடுத்தடுத்த படிகளில் தாராளமாக நீங்கள் மேலே போகலாம்.

தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் இராயல்ட்டி பெருமளவிற்கு எதையாவது உருவாக்கவோ, கண்டுபிடிக்கவோ முயற்சி செய்யுங்கள்.  பணம் தேவையில்லை எனும் போது நமது மூளை எவ்வளவு அற்புதமாகச் செயல்படுகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.  ஜே.கே.ரவுலிங் என்ற பெண்மணி பொழுது போகாமல் எழுதிய ஒரு புத்தகத்தால், இன்று அவர் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். (Harry Potter). மொத்தத்தில் உங்கள் பலம் பலவீனங்களை உணர்ந்து, அதே சமயம் ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாயின் அரவணைப்பு தேவை என்பதையும் உணர்ந்து - நீங்கள் நீங்களாகவும், ஒரு தாயாகவும் என்றும் கம்பீரத்தோடு வாழலாம்.

 

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top