நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம்???
  • 11:06AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:06AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

நீட் தேர்வுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவே இரண்டு முக்கியமான அறிவிப்புகளை மக்கள் கண்டுகொள்ளாமல் போனதில் ஆச்சரியமேதுமில்லை.  அவை Reservation நீக்கக் கோரியும், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்கவும் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள்.  ஏற்கெனவே ஜல்லிகட்டுப் போராட்டத்தின் போது நாம் கவனிக்காமல் விட்ட நீட், ஹைட்ரோகார்பன், உதய் மின்திட்டம், ஸ்மார்ட் கார்ட், GST போன்றவையில் இதுவரையில் உதய் மின்திட்டம் மட்டும்தான் இதுவரை பாதிப்பை பதிவு செய்யாத சூழ்நிலையில், தற்போது டாக்டர் அனிதா மரணம் மற்றும் நீட் ஆகியவை பற்றி போராடும் போது, பின்னணியில் சப்தமில்லாமல் நடைபெறும் இந்த வழக்குகளின் தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது.

Reservation-க்கு எதிராக மாணவர்கள் மற்றும் மக்களுக்கு போதுமான அறிவு இருப்பதால், நவோதயா பள்ளிகளை பற்றிப் பார்ப்போம்.  இந்தியா முழுவதும் நடைபெறும் இந்தப் பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி வைக்கப்பட்டுள்ளது.  காரணம் முதலில் - ஹிந்திக்கு எதிரான தமிழக அரசின், மக்களின் நிலைப்பாடு. நல்ல தரமான கல்வியை சொல்லித் தருவதாக பிரச்சாரம் செய்யப்படும் நவோதயா பள்ளிகள், ஹிந்தித் திணிப்பின் இன்னோர் முகம் என்று அனைவரும் கருதுகின்றனர்.  கோர்ட்டில் இந்த வாதம் வைக்கப்பட்ட போது, தனியார் பள்ளிகள் ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் போது நவோதயா ஏன் சொல்லித்தரக் கூடாது என்று கேள்வியெழுப்பியுள்ளனர். ஆரம்பம் முதலே ஹிந்தித் திணிப்பின் அடிப்படையைச் சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவு இது.  எங்களுக்கு என்று தேவைப்படுகிறதோ அன்று நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்பதுதான் ஹிந்தி எதிர்ப்பின் முதல் வாதம். 

மேலும் தனியார் பள்ளிகள் இங்குள்ள ஆசிரியர்களை நியமிப்பார்கள்... அதன் மூலம் பிள்ளைகள் சொந்த சூழ்நிலையில் படிப்பார்கள்.  நவோதயா தமிழ்நாட்டிற்குள் கல்வியை மட்டும் கொண்டு வராது... மற்ற அனைத்து மாநில நவோதயா பள்ளிகளையும் நன்கு கவனித்து அங்கு ஆசிரியர் நியமனங்களையும் கவனித்தால் உங்களுக்கு நன்கு புலப்படும். இத்தனை நாள் அமைதியாக இருந்து, நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் சமயம் இந்த விஷயம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதினாலேயே இவர்களின் உள்நோக்கம் சந்தேகப்படுவதாக இருக்கிறது.

இவர்கள் பொதுமக்களின் முன் வைக்கும் இன்னொரு வாதம் நவோதயா சிறந்த கல்வியை வழங்குகிறது என்று.  எனக்கு வாட்சப்பில் வந்த குறுந்செய்தியில் 15000 பிள்ளைகள் நீட் தேர்வு எழுதியதாகவும், அதில் 11,857 பேர் பாஸ் செய்து 7000 பேர் மருத்துவம் சேர்ந்ததாகவும் - rural மாணவர்களுக்கான சிறந்த கல்வி முறை என்றும் பரப்பி இருந்தனர்.  நான் அளித்த பதில், நான் அரசு பாடத்திட்டத்தில் படித்தவன். 15,000 பேரில் 11,857 பேர் பாஸ் என்பது வெறும் 80 சதவிகிதம், சரி... நீட் எழுதிய 11,857 மாணவர்களில் 7,000 பேர் மட்டும் மருத்துவம் சேர்ந்தார்கள் என்றால், பாதிக்கும் மேற்பட்டவர்கள் போதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதாகத்தானே அர்த்தம்... இதைத் தரமான கல்வி என்று எப்படிச் சொல்கிறீர்கள்??? என்று ஒரு கேள்வியும், நீட் விவகாரத்தில் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்திருக்கும் அரசு, பொது நுழைவுத் தேர்வு என்பதை அறிவிப்பது - அதிலும் 15% மட்டுமே மாணவர்கள் அடங்கிய ஒரு பாடத்திட்டத்தை அங்கீகரிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்று வாதிடப்படும் இந்தச் சூழ்நிலையில், புதிதாய் இன்னொரு பாடத்திட்டம் எப்படி ஏற்புடையதாகும்??? என்று கேள்விக்கு பதில் இல்லை.

நவோதயா நமக்குத் தேவை இல்லை என்பதற்கான காரணங்கள் மேலே சொன்னவைதான்... சமூகநீதி குறித்த தவறான புரிந்து கொள்ளல்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் இருந்துதான் துவங்கும்... இத்தனை போராட்டங்களின் நடுவிலும் தமிழர்கள் காட்டிய கண்ணியமும், கட்டுப்படும் சொல்லி இருக்கிறது நாம் படித்த பாடங்களின் தரத்தை... அது மாநிலக் கல்வியோ, தனியாரோ இந்தப் பாடத்திட்டங்கள் சரியானவை.  அவற்றில் ஒரு பொதுத்தன்மையை உருவாக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு, புதிதாய் இன்னொரு பாடத்திட்டத்தை பரிந்துரை செய்வது என்பது, செய்வது அரசாய் இருப்பினும், வழக்காடு மன்றங்களாய் இருப்பினும், மக்களாக இருப்பினும் அது தமிழினத்திற்கு, தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் துரோகம்...  நவோதயாவில் ஒரு சில பள்ளிக் கூடங்கள் அமைப்பதை விடவும், அந்தப் பணத்தைக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் க்ளாஸ்களை செயல்படுத்திவிட முடியும்… அதுதான் உண்மையான சமமான கல்விமுறையாக இருக்க முடியும்.  அதை விடுத்து, வலுக்கட்டாயமாக புதிய ஒரு பாடத்திட்டத்தை திணிப்பது என்பது எந்த வகையிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த உதவாது…

அரசுப்பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் பலநூறு கனவுகளோடு படித்துக் கொண்டிருக்கும் எங்கள் மாணவர்களின் ஒருமித்த குரலை கேளுங்கள் அது சொல்லும், "தற்போது எங்களுக்குத் தேவை கண்டிப்பாக இன்னொரு பாடத்திட்டம் அல்ல..."

 

 

 

 

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top