குஜராத் தேர்தல் வெற்றி யாருக்கு?
  • 09:03AM Dec 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:03AM Dec 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

22 ஆண்டுகளாக பிஜேபியின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய குஜராத் மாநிலத்தில் முதன்முறையாக பிஜேபி ஆட்டம் கண்டுள்ளது.  வாரா வாரம் கருத்துக் கணிப்பில் ஈடுபடும் பாஜகவினர் கிடைக்கும் தகவல்களால் சற்று அதிர்ந்துதான் போயிருக்கின்றனர் என்பது உண்மை. காரணம், Demonetisation மற்றும் G.S.T. குளறுபடிகளால் அதிருப்தியில் இருக்கும் குஜராத் தொழில்துறை மற்றும் ஹர்திக் பட்டேல். தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்த ஹர்திக் பட்டேல் தன்னுடைய முதல் பேரணியிலேயே 25,000 பேர் கலந்து கொண்டதன் மூலமாக ஒரு இணையற்ற மக்கள் தலைவனாக உருவானார்.  ஹர்திக் பட்டேல் தன் அனைத்துப் பிரச்சாரங்களிலும் நேரடியாக மோடி மற்றும் பிஜேபியைத் தாக்கிப் பேச, இதன் காரணமாக தலித் மக்கள் பிஜேபியை விட்டு காங்கிரஸை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இத்தனைக்கும் ஹர்திக் நேரடியாகக் களத்தில் கூட இல்லை.  காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய பின் ஹர்திக் தேர்தலில் நிற்பது குறித்து வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.  ஆனால் நேற்று காங்கிரஸிலிருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார் ஹர்திக்.  பிஜேபி கருத்துக் கணிப்புகளில் வாராவாராம் இறங்குமுகமாகி, சென்ற வார நிலவரப்படி 95-100 இடங்களில் ஜெயிக்கலாம் என்றும் காங்கிரஸ் 86–90 இடங்களில் ஜெயிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் 160 இடங்கள் என்று துவங்கி தற்போது 100 இடங்களே சந்தேகத்திற்கு உள்ளாகியிருப்பது பிஜேபியை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே, “மனதிற்கினிய என் தேச மக்களே…” என்று ஆரம்பிக்கும் பேச்சு கீழே இறங்கி, “நான் உங்கள் சேவகன் உங்களுக்குப் பணியாற்றுவது என் கடமை…” என்று மாறி இறுதியாகச் சென்ற வாரம் பேசிய போது, “மக்கள்தான் எங்கள் கடவுள்…” என்ற அளவிற்கு பிரச்சாரக் கூட்டத்தில் மோடியை இறங்கிப் பேச வைத்து விட்டது.  பதினைந்து நாட்களுக்கு முன் ஹர்திக் பட்டேலின் ஊர்வலம் நடைபெற்ற அதே நாளில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்முறையாக குஜராத்தில் பிஜேபி காலி நாற்காலிகளைச் சந்திக்க நேர்ந்தது.  அதிலிருந்து ஹர்திக் பட்டேல் சம்பந்தப்பட்ட நாட்களில் கூட்டங்களை நடத்துவதில்லை பிஜேபி.  தற்போது ஹர்திக் நேரடியாகவே காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியிருப்பது பிஜேபிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. இந்தக் குழப்பத்தினால் தேர்தல் அறிக்கையையே இறுதிக் கட்டப் பிரச்சாரத்திற்கு முதல்நாள்தான் ஞாபகம் வந்து பிஜேபி கையிலெடுத்தது.

வேறு வழியே இன்றி பிஜேபி தன் கடைசி ஆயுதத்தைக் கையிலெடுத்து விட்டது. அது தேசபக்தி. மணிசங்கர ஐயர், மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் தூதர் இரகசியமாகச் சந்தித்ததாகக் சொல்லிக் குற்றம் சாட்டி, அகமது பட்டேலை முதலமைச்சராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஒரு ஜோசப் விஜய் ஸ்டேட்மென்ட் அளித்து பரப்புரையை முடித்தார் மோடி.  மோடியின் மீடியாக்கள் இதனைப் பரபரப்பாக்க முயற்சி அதுவும் தோல்வியில் முடிந்தது.  ராகுல் காந்தி வழக்கத்தை விட ஆழ்ந்த அமைதியுடன் இதை எதிர்கொண்டு, “அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். பிரதமர் என்பது மதிப்பிற்குரிய பதவி. அதனால் அவரைப் பற்றி நான் அவதூறு பேச விரும்பவில்லை…” என்று மோடி போட்ட பவுன்சரில் 6 ரன்கள் அடித்து விட்டனர். 

தற்போது முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஒரு கிராமமே தேர்தலைப் புறக்கணித்துள்ளது.  போதாததற்கு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதே புகார் எழுந்துள்ளது.  இருப்பினும் ஒட்டுமொத்த சராசரி வாக்குப்பதிவு 68% சதவீதம் மட்டுமே.  அதாவது இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்கவில்லை.  இது மோடிக்குப் பெரிய சறுக்கல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  நடப்பவைகளை வைத்துப் பார்த்தால் குஜராத் இனியும் பாஜக கோட்டையாக இருக்காது என்பது மட்டும் புரிகிறது.  ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரஸ் தேர்தலுக்குப் பின் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top