Shoreline

#vastu shastra: பூதம் கேட்ட வரம்? வாஸ்து பகவான் தோன்றிய புராணக்கதை - சாஸ்திரப்படி வீடு கட்ட இது தான் காரணமா?

Nov 25 2019

முன்பொரு காலத்தில் அண்டகாசூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் என்ன செய்வதென்றே தெரியாமல் கொண்டு சிவ பெருமானையேப் போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனுடன் ஆக்ரோஷமாகப் போரிட்டார். அப்போது அவர் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் ஒன்று தோன்றியது.

கருப்பு நிறத்தில் இருந்த அந்த பூதத்திற்கு அகோரமாக பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது. அண்டகாசூரன் இறந்த பிறகு அவனுடைய உடலையும் உண்டது. அப்போதும் அதற்கு பசி அடங்கிய மாதிரி தெரியவில்லை. உடனே தன் பசியைப் போக்கும்படி சிவ பெருமானிடம் வேண்டியது. பூதம் கேட்டபடியே அது விரும்பியதை எல்லாம் சாப்பிடக் கூடிய வரத்தை அளித்தார் சிவ பெருமான்.

பூதம் பெற்ற வரத்தினால் அது மூவுலகையும் அழிக்கும் சக்தி பெற்றது. இதனை உணர்ந்த தேவர்கள் எல்லாம் ஒன்று கூடி பூதத்தை தரையில் படுக்க வைத்து, அதன் மேல் 45 கடவுள்களை அமர்த்தினர். இதனால் பசி அடங்காமல் துடித்தது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்றும் படி பூதம் பிரம்மாவிடம் வேண்டிகேட்டுக்கொண்டது.

உடனே பிரம்மா பூதத்திடம் "உன்னுடைய கோரபசியானது தணிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை எல்லாம் உண். சாஸ்திரப்படி வீடு கட்டப்படவில்லை என்றால் வீட்டில் வசிப்பவரை வாட்டு" என்று வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து நியதிகளை உருவாக்கி, அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையும், நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாகக் கருதப்படுகிறது. | கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!